May 30, 2014

மலரும் நினைவுகள் 16

தமிழ்த் திரைப்பட உலகில் வரலாறு படைத்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க படம் உலகம் சுற்றும் வாலிபன். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என திரைஉலகின் முப்பெரும் பரிமாணங்களில் மக்கள்திலகம் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட படம் உலகம் சுற்றும் வாலிபன். வெளிநாடுகளில் நடப்பது போல கதையை அமைப்பது சுலபம். ஆனால் கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களுக்கே நடிகர்களை அழைத்துச் சென்று படப்பிடிப்பை நடத்தி அந்தப் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்குவது என்பதை அந்த நாளில் நினைத்துக் கூட பார்க்க முடியாது. தமிழகத்தில் 11.05.1973இல் இப்படம் வெளியாகியது.சுமார் 41 ஆண்டுகளுக்கு முன் ஜப்பான்,தாய்லாந்து,கொங்கொங்,மலேசியா, மற்றும் சிங்கப்பூர் என தென் கிழக்காசிய நாடுகளில் படமாக்கப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் பாடல்கள் அத்தனையும் தேனோடு கலந்த தெள்ளமுது எனலாம். அப்போது இலங்கை வானொலியில் காலை எட்டுமணி தொடக்கம் ஒன்பதுமணி வரை நடைபெறும் பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியில் இப்படத்தின் ஒரு பாடலாவது ஒலிக்காமல் விடாது. இப்படத்தில் உள்ள பாடல்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடல் பிடிக்கும். எனக்குப்பிடித்த இப்பாடல்தான் அப்போது பலருக்கும் பிடித்திருந்தது. வானொலியிலும் இப்பாடலே கூடுதலாக ஒலித்தவண்ணம் இருந்தது. அந்தக்காலத்தில் அநேகமான வீடுகளில் ஓடியோ கசெற் மூலம் பாடல்கள் கேட்கும் வசதிகள் இல்லாதபடியால் இலங்கையில் இருந்த ஒரேஒரு வானொலியான இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்களையே கேட்பது வழக்கம். இதன் சிறப்பம்சம் என்னவெனில் எல்லா வீடுகளிலும் ஒரேபாடல் தான் ஒலிக்கும். வீட்டிலிருந்து பாடசாலைக்குப் போகும்போது ஒருபாடலை முழுமையாகக் கேட்கலாம். இதனால் அப்பாடலை மனப்பாடம் செய்தும்விடலாம். அந்தவகையில் என்னை மிகவும் கவர்ந்த இப்பாடல் எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது.

அப்போது ஐந்தாம்வகுப்பு மாணவனாக இருந்த எனக்கு இந்த உலகம் சுற்றும் வாலிபன் பாடல் புத்தகத்தை எப்படியாவது வேண்டிவிட வேண்டும் என்ற அவா என்னுள் இருந்தது. வீட்டில் கேட்டால் நல்ல மங்களம்தான் கிடைக்கும். நானாகப் போய் வேண்டுவதென்றால் சுன்னாகம் நகருக்குத்தான் போகவேண்டும். அங்கே தனியப்போக விடமாட்டார்கள். காரணம் வாகனப் போக்குவரத்து அதிகம் விபத்து ஏதும் நடக்கலாம் என்ற பயம். எனவே எனது வகுப்பின் படிக்கும் சுன்னாகம் நகரில் வசிக்கும் நண்பன் ஒருவரின் உதவியைநாடி ஒருமணிநேர மதியபோசன இடைவேளையில் அங்கே போய் அப்பாடல் புத்தகத்தை வாங்குவது என்று தீர்மானம் போட்டேன். திட்டமிட்டபடியே நண்பனுடன் சென்று பாடல்புத்தகத்தை வேண்டி நடந்தபடியே புத்தகத்தை விரித்தபடி ஒவ்வொரு பாடலாக பாடியபடி பாடசாலைக்கு திரும்பினேன். இடைவேளை முடிந்து முதலாவது பாடமாக ஆங்கிலவகுப்பு நடைபெற்றது. ஆங்கில ஆசிரியர் பாடத்தை கற்பித்துக்கொண்டிருந்த அதேவேளையில் நானோ கடைசிவரிசையில் அமர்ந்திருந்து ஆங்கிலப்புத்தகத்தில் நடுவே உலகம் சுற்றும் வாலிபன் பாடல் புத்தகத்தை சொருகி வைத்துக்கொண்டு அன்றுகாலை பாடசாலை வரும்போது ஒலித்த அப்பாடலை மனதிற்குள் பாடிக்கொண்டே இருந்தேன். அதேவேளையில் சற்றும் எதிர்பார்க்காமல் வகுப்பறையினுள் நுழைந்த இன்னொரு ஆசிரியர் என்னுடைய கூத்தைக் கண்டுவிட்டார். பின்பு சொல்லவா வேண்டும்? என்னை தண்டித்து மட்டுமல்ல மிகவும் ஆசையுடன் வேண்டிய அந்தப் பாடல்புத்தகமும் பறிபோய்விட்டது. அதையும்விட எனது கூத்தைக் கண்டுபிடித்த ஆசிரியர் எமது அயல்வீட்டுக்காரர் வேறு.

நடந்தது எல்லாவற்றையும் ஒன்றும்விடாமல் எனது வீட்டில் போய் சொல்லிவிட்டார். இதையும்விட பலர் என்னை சுன்னாகம் நகருக்குள் கண்டதாகவும்,எதிரே வாகனங்கள் வருவதைக் கூட கவனிக்காது தலையைக் குனிந்தபடி ஏதோ வாசித்துக்கொண்டு போனதாகவும் தகவல்கள் சுடச்சுட எனது வீட்டுக்கு நான் போகுமுன்பே போய் விட்டது. அன்று காலை ஒலித்த இந்தப் பாடலால் நான் பட்ட அலைச்சல்,அவமானம்,தண்டனை கொஞ்சநஞ்சமல்ல. இருந்தாலும் 41 ஆண்டுகளாகியும் இந்தப்பாடல் என் இதயத்தைவிட்டு நீங்கவே இல்லை. 


அட்டகாசமான ஆரம்ப இசை,அசத்தலான குரல்கள்,அமர்க்களமான பாடல் காட்சி என அத்தனை சிறப்பம்சங்களும் நிறைந்தது. மக்கள் திலகத்துடன் தாய்லாந்து நடிகை மெட்டா ருங்ரட்டா இணைந்து நடிக்க கவிஞர் வாலியின் கவிதைக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை மழையினைப் பொழிகிறார்.