மலரும் நினைவுகள் எட்டாம் பாகத்தைப் போலவே நாம் தலைதெறிக்க ஓடியதொரு மிகவும் சுவாரிசியமான சம்பவம் இன்றைய மலரும் நினைவுகளாக உங்கள் முன் வருகின்றது.1982,1983 இல் வெளிவந்த ஒருபாடல் அப்போது பலராலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.காரணம் இனிமையாதது என்பதையும் தாண்டிக் கிளுகிளுப்பானது.இன்னும் சொல்லப் போனால் மிகவும் விரசமானது என்ற முத்திரை குத்தப்பட்ட பாடல் அது. குறிப்பாக இளைஞர்களை மிகமிக ஈர்த்தபாடல்.ஏன் அவர்களை ஈர்த்தது என்பதற்கான காரணத்தை பாடல்காட்சியைப் பார்க்கும் போது உணர்ந்துகொள்வீர்கள்.
சகலகலாவல்லவன் என்ற படத்தில் வாலிபக்கவிஞர் வாலி எழுதி இளையராஜா இசைஅமைத்து மலேசியா வாசுதேவன்,ஜானகி ஆகியோர் பாட திரையில் நடிப்பவர்கள் கமலஹாசனும்,அம்பிகாவும்.இது தமிழகத்தில் 1982 இல் வெளியாகி ஓடிக்கொண்டிருந்த அதேவேளையில் ஈழத்தில் தொலைக்காட்சிகள் ஊடாக பலரும் ஓடித்திரிந்து பார்த்தனர் இப்பாடலுக்காகவே எனலாம்.நானும் எனது நண்பர்களும் கூட பார்க்கத் தவறவில்லை.பாடல்கள் மட்டுமல்ல படம் முழுவதுமே ஜனரஞ்சகம் நிறைந்த கிளுகிளுப்பானது.
அடுத்தாண்டு அதாவது
1983 இல் இலங்கையில் திரைக்கும் வந்துவிட்டது.பலரும் தொலைக்காட்சியில் பார்த்தவிட்டனர் எனவே நீண்டகாலம் இது ஓடாது என்று ஆருடம் சொன்னார்கள் ஆனால் ஜனத்திரள் காட்சிகளாக ஓடிக்கொண்டேயிருந்தது.குறிப்பாக இளவயதினரே திரையரங்கில் நிறைந்து காணப்பட்டனர்.காரணம் இது குடும்பமாகப் போய்ப் பார்ப்பதற்கு உகந்தபடம் இல்லை.மற்றது அமைதியாக இருந்து பார்க்கமுடியாமல் இளைஞர்களின் கூச்சல் குழப்பம் போன்றன.நாமும் ஒருதடவை அகன்ற திரையில் போய் பார்ப்போம் என முடிவெடுத்து மிதிவண்டியில் யாழ்ப்பாணம் ராணி திரையரங்கிற்கு போனோம்.வெளியாகி சிலநாட்கள் என்பதால் கூட்டம் அலைமோதியது.நுழைவுச்சீட்டு வேண்டும் போதே எங்கள் குழுவைச் சேர்ந்த சிலருக்கும் இன்னொரு குழுவைச் சேர்ந்தவர்களுக்கும் சிறிய வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.என்ன போதாதகாலமோ தெரியவில்லை பின்பு படம் பார்க்கும் போதுகூட அந்தக்குழுவினர் எமக்கு அருகிலேயே வந்து உட்கார்ந்துகொண்டனர்.
படம் ஓடத்தொடங்கியதும் கூச்சல் போடும் விடயத்தில் எமது குழுவில் இருந்த சில குழப்பவாதிகளுக்கும் மற்றைய குழுவினருக்கும் தகராறு தொடங்கி முற்றிவிட்டது. அந்தக் குழுவினர் யாழ்ப்பாணம், அதன் சுற்றுவட்டத்தைச் சேர்ந்தவர்கள். நாமோ வெளியூர்க்காரர் எனவே நாம் சற்று அடங்கிப்போவது நல்லது என்று புத்திமதி சொல்லி எமதுதரப்பு குழப்பவாதிகளை சிறிது அடக்கிவிட்டோம்.பின்பு படம் முடியும்வரை எவ்வித பிரச்சனையும் இன்றி திருப்தியாக படத்தைப் பார்த்துவிட்டு படத்தில்வந்த காட்சிகளைப்பற்றி பேசிக்கொண்டு மிதிவண்டியில் வீடுநோக்கிப் போய்க்கொண்டிருந்தோம்.
கஸ்தூரியார் வீதியூடாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்திற்கு முன்பாக போய்க்கொண்டிருக்கும் போது எதிராக யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி மாணவிகள் சிலர் நடந்துவந்துகொண்டிருந்தனர்.எமது கூட்டத்தைச் சேர்ந்த சிலர் அந்த மாணவிகளைக் கடக்கும்போது இப்பாடலின் இடையேவரும் விரசமான முனகல் சத்தத்தை செய்து காட்டினார்கள்.இதை அருகில் உள்ள மைதானத்தின் அரைக்குந்தில் உட்கார்ந்திருந்த வேறு இளைஞர்கள் பார்த்துவிட்டனர்.உடனே அவர்களுக்கும் எமக்கும் வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பு உண்டாகும் நிலைக்கு வந்துவிட்டது.இந்த இளைஞர்கள் ஏதோ பெரிய ஒழுக்க சீலர்கள் இல்லை,இவர்களும் சைட் அடிக்கவே அதில் வந்து தினமும் குந்தியிருப்பவர்கள்தான்.இதே நேரம் பார்த்து திரையரங்கில் உரசுப்பட்டவர்களும் யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென அங்கு வந்துவிட்டனர்.எமது கஷ்டகாலம்தான் என்னவோ குந்தியிருந்தவர்களும் இவர்களும் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.நாமோ ஆறுபேர் மட்டுமே இப்போது அவர்களின் எண்ணிக்கையோ மிக அதிகம்.அதைவிட நாம் வெளியூர்க்காரர்கள்.அவர்கள் உள்ளூர்க்காரர்கள்.பேசாமல் வாயை மூடிவிட்டு மெல்ல நழுவிப்போவதுதான் நல்லது என்று எம்மை போக விட்டார்களா பாவிகள்......தெருவில் கிடந்த கற்கள்,தடிகளை தூக்கத் தொடங்கவும் நாம் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு ஓடத்தொடங்கிவிட்டோம்.சரி எமக்குப் பயந்து ஓடுகிறார்கள் ஓடித்தப்பட்டும் என்று விட்டார்களா.......
அதுவும் இல்லை.திரும்பிப் பார்க்காமல் ஒரே ஓட்டம்தான்.அவர்களும் விடுவதாக இல்லை கற்களால் எறிந்தபடி சிறிதுதூரம் துரத்திக்கொண்டு வந்துவிட்டு பின்பு திரும்பிப் போய்விட்டனர்.
காங்கேசன்துறைவீதி ஊடாக சிறிது நேரத்தில் சுன்னாகத்திற்கு போகவேண்டியவர்கள் கல்லெறிக் கலக்கத்தில் கால்போன போக்கில் சந்துபொந்துகள் ஊடாக பலமணிநேரம் பயணித்து ஒவ்வொருவராக சுன்னாகம் சந்தியில் வந்து மிதந்தோம்.அதற்குப்பின் யாழ்ப்பாணப்பக்கம் தலைவைத்துக்கூடப் படுப்பதில்லை.ஆனால் அவர்கள் எமதுபக்கம் வரட்டும் பழி தீர்க்கலாம் என்று பலநாட்கள் எனது நண்பர்கள் காத்திருந்தார்கள்.அது இறுதிவரை கைகூடவேயில்லை.காரணம் அடுத்த சிலமாதங்களில் தமிழர்பகுதி எங்கும் யுத்த மேகங்கள் சூழ்ந்து பதட்டநிலை உருவாகி விட்டதுடன்,திருநெல்வேலி தபால்பெட்டிச் சந்தியில் வெடித்த நிலக்கண்ணிவெடியுடன் தமிழர்களின் ஒட்டுமொத்த வாழ்வு எல்லாமே வெடித்துச் சிதறிவிட்டது.
நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்