January 18, 2014

மலரும் நினைவுகள் 10

மலரும் நினைவுகளை நீண்டகாலமாக காணவில்லை என பல நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் மீண்டும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை பாகம் பத்தாவதில் பதிவு செய்வதில் பேருவகை அடைகிறேன். நாம் எம் உயிரிலும் மேலாக நேசிக்கும் எம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிதைவு என்பது அது தோன்றிய இடம் என்று சொல்லப்படும் தாய் தமிழகத்தில் ஆரம்பித்து மெல்ல மெல்ல இப்பூமிப்பந்தில் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் வியாபித்து நிற்கிறது.இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும்,உண்மைக்காரணம் யாதெனில் தாய்த்தமிழகத்தில் இருந்து வெளிவரும் திரைப்படங்களும்,ஊடகங்களும்(குறிப்பாக தொலைக்காட்சிகள்)ஆகும்.எமது மொழியின் சிதைவு கண்டு கலங்கும் அன்பு நெஞ்சங்களுக்கு சிறிது ஆறுதலான செய்தி இது. எனது முதலாவதுவெளிநாட்டுப்பயணமும்,விமானப்பயணமும் ஒரு தமிழ் மணம்வீசும் மண்ணை நோக்கியதாகவே இருந்தது.ஆம் 1989இல் அழகும்,சுத்தமும் நிறைந்த சிங்கப்பூர் சென்றேன்.முதலில் நெஞ்சைஅள்ளும் அழகுமிக்க விமான நிலையத்தை பார்த்தவுடன் பிரமித்துப் போனேன்.தொடர்ந்து ஒரு வாடகை வண்டியில் நான் போய் தங்கவிருக்கும் விடுதியை நோக்கிப் போனேன். அந்த வண்டியை ஓட்டிச்சென்ற நபர் ஒரு சீன இனத்தவர்.

ஆரம்பத்தில் அவர் ஆங்கிலத்தில் சிறிது உரையாடிவிட்டு அமைதியாகி விட்டார்.ஓடிடும் மேகங்கள் தொட்டுச் செல்வது போல் வானளாவ ஓங்கிய கட்டிடங்கள்,நேர்த்தியான சாலைகள்,நேராக ஊர்ந்துசெல்லும் வாகனங்கள்,அழகிய சீனத்து சிட்டுக்கள் என்று பல வண்ணவண்ணக் காட்சிகளைப் பார்த்து ரசித்தபடியே பிரயாணம் தொடர்ந்தது.இதை நான் ஆர்வமாக ரசித்துப் பார்க்கக் காரணம் ஏற்கனவே பல திரைப்படங்களில் சிங்கப்பூரை பார்த்தபடியால் தான்.மனதிற்கு இதம்தரும் ரம்மியமான காட்சிகளை ரசித்தபடியால் தான் என்னவோ திடீரென அங்கே படமாக்கப்பட்ட ஒரு பாடல்காட்சி நினைவுக்குவர அப்பாடலை நான் மெதுவாகப் பாடத் தொடங்கினேன்.பாடி முடிந்ததும் "பாட்டு முடிந்ததா"என்று ஒரு குரல் கேட்டது.நான் திகைத்துப் போய் அக்கம்பக்கம் பார்த்தேன்.நாம் இருவரை தவிர அந்த வண்டியில் யாருமே இல்லை.அந்த சீன சாரதி பலமாக சிரித்தான்.எனக்கு ஆச்சரியமாகவும்,அதே நேரம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.பின்பு நான் இறங்கும்வரை அவன் என்னுடன் தமிழில் உரையாடியபடியே வந்தான்.மிகக் குறைந்த தமிழர்கள் வாழும் நாட்டில் வேறொரு இனத்தவன் சுத்தத் தமிழில் பேசும்போது தமிழர்களாகிய நாம் எதற்காக ஆங்கிலத்திலும்,தமிங்கிலத்திலும் பேசவேண்டும்???? 

இப்பாடலுக்கும்,நான் சந்தித்த அனுபவத்திற்கும் ஒற்றுமை என்னவென்றால் இப்பாடலில் நாயகனோ நாயகி வேறு இனத்துப்பெண் என நினைத்து அவள் அழகில் மயங்கி அவளின் அழகை அங்குலம் அங்குலமாக வர்ணித்துப் பாடுகிறான். பாடல் முடிந்தபின்புதான் நாயகனுக்குத் தெரிகிறது நாயகியும் ஒரு தமிழ்ப் பெண் என்று.1970 க்களில் ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்த கனவுக்கன்னி மஞ்சுளாவின் அழகினை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 
ரசித்துப் பாடும் காட்சி என்றால் மேற்கொண்டு நான் விபரிக்கவேண்டுமா???கவியரசு கண்ணதாசனின் கவிதைக்கு மெல்லிசை மன்னன் விஸ்வநாதன் இசைமீட்ட அவன்தான் மனிதன் என்ற படத்தில் சௌந்தரராஜன் பாடுகிறார்.

உலகத்தை விலைபேசவந்த சிலையை,ஊடல் எனும் கலையை,ஓவியச் சீமாட்டியை,ஓசைதரும் மணியை,ஒருதரம் நாமும் பார்த்து ரசிப்போமா நண்பர்களே.....................................


நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்

மலரும் நினைவுகள் 9


பலருக்கு தம்வாழ்நாளில் மறக்கவேமுடியாத நாட்கள் எனப் பல உள்ளன.திருமணநாள்,அன்புக்குரியவர்களின் இறந்தநாள்,அன்புக்குரியவர்களின் பிறந்தநாள்,மிகவும் சந்தோசமான சம்பவம் நடந்தநாள் அல்லது மிகவும் சோகமான சம்பவம் நடந்தநாள் எனப் பல உள்ளன.என் வாழ்விலும் அப்படிபல இருந்தாலும் மிகமிக முக்கியமான மறக்கமுடியாதநாள் என்றால் இன்றுதான்.காரணம் இன்றையதினம் நான் மிகவும் ஏமாற்றப்பட்டு அதனால் கூனிக்குறுகி நின்றநாள் ஆகும்.ஆம்,இன்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன் 01.04.1983 அன்று அதாவது முட்டாள்கள் தினமன்று நான் முட்டாள் ஆக்கப்பட்டநாள்.பாடசாலையில் படிக்கும்போது கூடப்படிக்கும் நண்பன் ஒருவனுக்கும் வேறொரு வகுப்புப் படிக்கும் மாணவிக்கும் இடையே பலவருடங்களாக காதல்.அவர்களின் பெற்றோர்கள்,உடன்பிறப்புகளின் எதிர்ப்பையும் எல்லாம் சமாளித்து அவர்களின் காதல்பயணம் தொடர சகமாணவர்களாகிய நாம்தான் திரைப்படங்களில் வருவதுபோல் முன்னின்று செயல்பட்டோம்.தூதுபோவது,தகவல்பரிமாற்றம் செய்தல்,ஆபத்து நேரங்களில் உதவுதல் போன்றன.இன்பம் நிறைந்த பாடசாலை வாழ்க்கை முடிந்தபின்பும் அவர்களின் காதல்பயணம் தொடர்ந்துகொண்டேதான் இருந்தது.பள்ளி வாழ்க்கை முடிந்துவிட்டதால் அவர்களுடனான தொடர்புகள் குறைந்துவிட்டன.இப்போது உள்ளதுபோல் கைத்தொலைபேசி வசதிகள் எதுவுமில்லை அப்போது.எதிர்பாராதவிதமாக எங்கேயாவது சந்தித்தால் மட்டும் உண்டு.அல்லது வீட்டுவாசலில் போய்நின்று மிதிவண்டியில் உள்ள மணியை அடித்து நண்பர்களை அழைத்துப் பேசுவோம்.பாடசாலையில் படிக்கும்போதும் சரி வெளியேறிய பின்பும் சரி நாம் எங்கு போனாலும் சேர்ந்தே போவதுண்டு.


14.01.1964 இல் தைப்பொங்கலன்று தமிழகத்தில் வெளியானதுதான் பெரும் பணத்தைக்கொட்டி மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்ட கர்ணன் என்ற திரைப்படம்.இது ஈழத்தில் வெளியான போது சிறுவனாக இருந்தபடியால் அதைப் பார்க்கவில்லை.அதைவிட அது வெளியானது பற்றி எதுவுமே நினைவில்லை.மீண்டும் 14.01.1983 இல் தைப்பொங்கலன்று யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் திரையிடப்பட்டு மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது.மகாபாரதக்கதையினை கொஞ்சம் அறிந்திருந்தபடியினால் எனக்கும் அதை உடனே பார்க்கவேண்டுமென்ற ஆவல் இருந்தது.ஒருநாள் யாழ்ப்பாணத்திற்கு வேறு ஒரு அலுவலாகப் போனபோது கர்ணன் படத்தை நான் தனியாக போய் பார்த்துவிட்டேன். எமது நண்பர்கள் வட்டத்தில் உள்ள ஒருவரின் நண்பனும் இதே படத்தைப் பார்த்துவிட்டு என்னுடன் (வெவ்வேறு மிதிவண்டியில்) வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.அப்போது இருவரும் படம் பற்றிப் பேசிக்கொண்டே வந்தோம்.நான் அதிகமாகப் பேசியது அதில் வந்த ஒருபாடலும்,பாடல் காட்சியும் பற்றியது தான்.இவர் மூலமாக நான் தனியப் போய் படம் பார்த்தசெய்தி எனது நண்பர்களுக்கு எட்டிவிட்டது.இவன் எங்களுக்கு சொல்லாமல் போய்ப் பார்த்துவிட்டானே என்ற கோபத்தில் அவர்கள் என்னைப் பழிதீர்க்க வேண்டும் என்று பெரிய திட்டம் ஒன்றினைத் போட்டுக் காத்திருந்தனர்.

01.04.1983 ஒரு வெள்ளிக்கிழமையன்று எமது அயல்வீட்டில் 16 வயதான பையை ஒருவன் புற்றுநோயினால் இறந்துவிட்டான்.இதனால் நான் உட்பட எங்கள் ஊரே சோகத்தில் மூழ்கியிருந்த வேளையில் ஏதோ அதிரடிப்படையினர் வந்தது போல் என் வீட்டு வாசலில் வந்து இறங்கினார்கள் எனது பள்ளி நண்பர்கள்.ஏற்கனவே நான் குறிப்பிட்ட காதல்ஜோடிகளுக்கு" படங்களில் வருவதுபோல் இருவீட்டில் இருந்தும் பிரச்சனைகள் உருவாகி அடிதடி,கைகலப்பு வரை வந்துவிட்டது.இதனால் அந்த ஜோடிகள் வீட்டைவிட்டு ஓடிவந்து தங்குவதற்கு இடமின்றி யாழ்ப்பாணத்தில் ஒருகடையினில் நிற்கிறார்கள் நாம் எல்லோரும் அங்கே போகிறோம் நீயும் சேர்ந்து வரவேண்டும்" என்றார்கள்.நான் இந்த மரணச் செய்தியைசொல்லி மிகவும் குழம்பிப் போய் இருக்கிறேன் தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சிக்கூத்தாடிக் கேட்டுப் பார்த்தேன்.அவர்கள் விடவேயில்லை.நீயும் ஒரு நண்பனா உனக்கும் ஒரு துன்பம் வரும் தானே பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லி மிரட்டி என்மனதினை மாற்றி என்னை சம்மதிக்கச் செய்தனர்.மனதில் சோகம் அதனால் வந்த குழப்பத்தினால் அன்று முட்டாள்கள் தினம் என்ற நினைப்பு சுத்தமாகவே இல்லை.எல்லோரும் மிதிவண்டியில் இரவுநேரம் யாழ்பாணத்தை நோக்கிப் போகிறோம்.ராஜா திரையரங்கின் முன் என்னையும் இன்னொருவரையும் நிறுத்திவிட்டு மற்றவர்கள் கடையில் நிற்கும் அந்தக் காதல்ஜோடியை அழைத்து வருவதாகச் சொல்லிப் போய்விட்டார்கள்.அப்போது அரங்கின் உள்ளே கர்ணன் படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.அதில் நான் மிகவும் விரும்பி ரசித்த பாடல் திரையினில் ஒலிக்கத் தொடங்கவும் அழைத்துவருவதாக சொல்லிவிட்டுப்போன அனைவரும் சற்றுத்தள்ளி ஒழித்துநின்றுவிட்டு சேர்ந்துபாடிக்கொண்டு திடீரென என்முன் வந்து நின்றார்கள்.(ஓடிப்போனதாகச் சொல்லப்பட்ட காதலன் உட்பட)எனக்கு ஒரே அதிர்ச்சி........திகைப்பு..........

ஏன் இப்படி என்றே புரியவில்லை நண்பர்கள் சொல்லித்தான் இன்று முட்டாள்கள் தினம் என்று தெரிந்துகொண்டேன்.எனக்கு வந்த கோபத்தையும்,ஆத்திரத்தையும் அடக்கவே முடியவில்லை.எல்லோரையும் கண்டபடி திட்டிப் பேசிவிட்டு மிதிவண்டியை எடுத்துக்கொண்டு படுவேகமாக வீடு வந்துசேர்ந்துவிட்டேன்.இரண்டு வருடங்கள் கழித்து உண்மையாகவே அந்த ஜோடிகள் வீட்டாரின் எதிர்ப்பினால் ஐரோப்பியநாடு ஒன்றுக்கு ஓடிவந்து விட்டார்கள்.அது மட்டுமல்ல இப்போது அவர்கள் தாத்தா,பாட்டி ஆகியும் விட்டார்கள்....................................

பாடலின் கருத்து என்பது, காதல் வயப்பட்ட பெண்ணின் ஏக்கம்!!! இப்பாடலுக்கு அமைந்த இசை,வெகு சிறப்பு கர்ணனில் எல்லாப் பாடல்களுமே பிரமாதம். குறிப்பாகப் இப்படப் பாடல்கள் யாவும் இந்துஸ்தானி இசையில் அமைந்தது.வீணை, மிருதங்கம்;வயிலினுடன், வட இந்திய காற்றிசை வாத்தியமான செனாய்; மற்றும் சாரங்கியும் இதில் கச்சிதமாக இசைத்து மகிழ்வூட்டுகிறது.என்றும் கேட்க இனிக்கும் பாடல் சுசிலா குழுவினரின் கொஞ்சும் குரலினை பாராட்டியே ஆகவேண்டும். 

ஈடொன்றும் கேளாமல்
எனையங்கு கொடுத்தேன்
கொடை கொண்ட மதயானை
உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு
நானிங்கு மெலிந்தேன்


எந்த பெண்ணுமே உறுதிமொழி கேட்டு தான் தன்னை எவனிடமும் கொடுப்பாள் அவளுக்கு ஈடாக அவனது வார்த்தை. இவள் அதைக் கேட்காமலே தன்னை கொடுத்து குறைத்துக்கொண்டாள் தன்னுடலையா? சிறப்போ சிறப்பு..........கவியரசரும் மெல்லிசை மன்னரும் மத்யமாவதி ராகத்தில் கூடிக் களித்த பாட்டு இது. சுருங்கச் சொன்னால் இது கேட்கத் திகட்டாத கானம்.தேவிகா குழுவினரின் நடிப்பினை நான் சொல்லவேண்டுமா பாடல்காட்சியைப் பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.



நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்

மலரும் நினைவுகள் 8



1978ம் ஆண்டு இலங்கை,இந்திய கூட்டுத்தயாரிப்பில் உருவான தமிழ்ப்படம் "பைலட் பிரேம்நாத்" கதாநாயகனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், கதாநாயகியாக சிங்கள திரைவானில் அப்போதைய மகாராணியான மாலினி பொன்சேகாவும் நடித்தனர்.இப்படத்தின் படப்பிடிப்புக்கள் பெரும்பாலும் இலங்கையிலேயே அதுவும் சிங்கள பிரதேசங்களில் நடைபெற்றன.இது சம்பந்தமான செய்திகள் அப்போது தமிழ் ஊடகங்களில் மிகவும் பரபரப்பாக வெளிவந்தன. இதைவிட இந்தப்படத்தின் பாடல்களோ மிகவும் பிரபலமாக திக்கெட்டிலும் ஒலித்தபடி இருந்தது. இதனால் இப்படம் எப்போது வெளிவரும் பார்க்கலாம் என்று எல்லோரும் மிக ஆவலோடு காத்திருந்தனர். படமும் 1979 ஆங்கில புத்தாண்டன்று கவர்சிகரமான விளம்பரங்களுடன் கோலாகலமாக வெளிவந்தது.யாழ்ப்பாணத்தில் வின்சர் திரையரங்கில் திரையிடப்பட்டது.

 
அப்போது தொலைக்காட்சி இல்லை, படம் என்றால் திரையரங்கத்திற்கு போனால் தான் உண்டு. அதுவும் வருடத்தில் ஒன்று,இரண்டு பார்க்கத்தான் பெற்றோர்கள் சம்மதிப்பார்கள். அதுவும் சும்மா காசைத்தந்து இந்தா மகனே படம் பார்த்துவிட்டுவா என்று சொல்லமாட்டார்கள். 

அவர்களின் மனம் சந்தோசப்படும்படியாக நாம் ஏதாவது செய்தால் மட்டுமே உண்டு.அந்தவகையில் 1978 மார்கழி மாதம் பத்தாவது வகுப்பு அதாவது சாதாரண தரம் இறுதிப் பரீட்சை நடைபெற்று அதன் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருந்தோம்.காரணம் அதில் சித்தியடைந்தால் பைலட் பிரேம்நாத் பார்க்கலாம்.பங்குனி மாதமளவில் முடிவுகளும் வந்தது.எங்கள் நண்பர்கள் வட்டத்தில் உள்ள அனைவரும் சித்தியடைந்துவிட்டனர்.இந்த நண்பர்கள் வட்டம் என்பது பாடசாலை ரீதியாக இல்லாமல் பல ஊர்கள் ரீதியானது.இதில் பல்வேறு பாடசாலைகளை சேர்ந்தவர்களும் உள்ளனர்.மாலைவேளைகளில் மதில்கள் மேல் இருந்துகொண்டே எங்கள் மகாநாடுகள் நடைபெறும்.அதில் இந்தப்படம் பார்ப்பது பற்றிய மகாநாடு பல நாட்கள் முடிவுகள் எட்டப்படாமல் நடைபெற்றது.இறுதியாக படம் எப்படி கோலாகலமாக வெளிவந்ததோ அதுபோலவே நாமும் கோலாகலமாக கொண்டாடிப்பார்ப்பது என்ற முடிவு எட்டப்பட்டது.என்ன அது கோலாகலமாக பார்ப்பது என்பது????..............

சுன்னாகத்தில் இருந்து நான்காவது தரிப்பிடமான யாழ்ப்பாணத்திற்கு தொடரூந்தில் போக இருபது நிமிடங்கள் ஆகும். இந்த நேரஅளவு மிகச்சிறியது இதனால் நாம் கும்மாளம் அடிக்கும் நேரமும் குறையும்.எனவே சுன்னாகத்தில் இருந்து மற்ற மார்கத்தில் உள்ள இறுதித் தரிப்பிடமான காங்கேசன்துறைக்கு போய் அங்கிருந்து திரும்பவும் சுன்னாகம் ஊடாக யாழ்ப்பாணம் போவது என்று முடிவானது.அதுவும் சும்மா அமைதியாக இருந்து போவதுமில்லை.தாரை,தம்பட்டம்,ஆட்டம்,பாட்டு என்று ஒரே அமர்க்களம்.அதைவிட எல்லோரும் பெரிய ரோமியோ என்ற நினைப்பில் புதிய உடைகள்,கறுப்புக் கண்ணாடி போன்றனவற்றை இதற்கென வேண்டி அணிந்துகொண்டு கலாதியாகப் புறப்பட்டோம்.இதில் இருவர் என்ன செய்தார்கள் என்றால் வரும்போது சுன்னாகம் சந்தைக்குப் போய் விற்பனைக்கு உதாவாது என்று கழித்துவிட்ட அழுகிய தக்காளிப்பழங்கள் பலவற்றை ஒரு பையினுள் எடுத்துவந்தனர்.எதற்காகதொடரூந்து ஓடிக்கொண்டு இருக்கும்போது வெளியில் தென்படுவோருக்கு குறிப்பாக இளம்பெண்களுக்கு எறிவதற்கு.நானும் வேறு சிலரும் இது வேண்டாம்,விபரீதத்தில் போய் முடியும் என்றோம் ஆனால் அவர்கள் கேட்கவில்லை.காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு செல்லும் "யாழ்தேவி" என்று அழைக்கப்படும் கடுகதியில் ஏறினோம்.அதில் கொழும்பு செல்லும் பிரயாணிகள் நிறைந்திருந்தனர்.அந்தக் கடுகதி சுன்னாகம்,கோண்டாவில் அடுத்தது யாழ்ப்பாணம்.எல்லா இடங்களிலும் நிறுத்தப்பட மாட்டாது.இந்தத் தைரியத்தில் தெருவில் தென்படுவோருக்கு எல்லாம் அழுகிய தக்காளிப்பழ அபிசேகம் நடந்தவண்ணம் இருந்தது.அதும் யாரும் நடந்து வருவதைக் கண்டால் "தெருவினில் ஒரு வனதேவதை வருகிறது",மிதிவண்டியில் யாரும் வருவதைக் கண்டால் "சைக்கிளில் ஒரு வனதேவதை வருகிறது" எனச் சொல்லி அவர்களுக்கு ஏறிவிழும்.இந்த வனதேவதைக்கு விளக்கம் வேண்டுமென்றால் கீழே வரும் பாடல்காட்சியை பாருங்கள்.ஒருபுறம் ஆட்டம்,பாட்டு மறுபுறம் தக்காளி வீச்சு நடந்தபடி தொடரூந்து யாழ்ப்பாணத்தை அண்மித்துவிட்டது.நாம் இறங்கும் இடம் அண்மித்துவிட்டது நிறையத் தக்காளிப் பழங்கள் உள்ளன எனவே இனியும் இதை வைத்திருந்து பலனில்லை என நினைத்து யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி மைதானத்தில் நிறைய மாணவிகள் உடல்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு நின்றனர்.இதைக்கண்டதும் தக்காளிப்பழங்கள் சரமாரியாக அவர்களைப் பதம் பார்த்தது.மாணவிகளின் வெள்ளை சீருடை சிவப்பாக மாறிவிட்டது.அதேநேரம் தொடரூந்துப்பாதை திருத்தும் வேலை நடைபெறுவதால் அது கொஞ்சம் மெதுவாகவே சென்றது.திருத்தும் வேலையாட்கள் ஓரமாக நின்றனர்.இந்த ரோமியோக்களின் சேட்டைகளை பார்த்தும் விட்டனர்.என்ன கஷ்டகாலமோ தெரியவில்லை சமிக்கை விழாததால் தொடரூந்து நின்றுவிட்டது.நின்றதும்தான் தாமதம் தடிகள்,பொல்லுகளுடன் தொடரூந்தினுள் ஏறிவிட்டனர் அந்த வேலையாட்கள்.பின்பு சொல்லவும் வேண்டுமா..... தர்மஅடி...சொல்லிவேலையில்லை.....

எல்லோரும் சிதறுண்டு ஓட்டம்.சிலர் வெளியில் இறங்கியும் ஓடிவிட்டனர்.நானும் வேறு சிலரும் கழிப்பறைக்குள் ஒளிந்துகொண்டதால் தப்பித்தோம்.சமிக்கை விழுந்து தொடரூந்து புறப்படத் தொடங்கியதும் தந்த தர்மஅடிகாரர்கள் இறங்கிப் போய்விட்டனர்.அத்துடன் ஆர்ப்பாட்டம் எல்லாம் அடங்கிவிட்டது.கோலாகலம் என்று புறப்பட்டு அலங்கோலமாக வின்சர் திரையரங்கம் சென்றடைந்தோம்.இந்தப்பாடல் காட்சியைப் பார்த்த பின்பேஅந்த வனதேவதை என்ற சொல்லின் அர்த்தம் புரிந்தது எனக்கும்.படம் பார்த்துமுடிந்து வெளியே வரும்போதுதான் தொடரூந்தை விட்டு வெளியே ஓடிய வீரர்கள் களைத்து விழுந்து பாதயாத்திரையாக வருகிறார்கள்.பெரிய பாவமாக இருந்தது அவர்களைப் பார்க்க.

கவிஞர் வாலியின் கவிதைவரிக்கு மெல்லிசைமன்னர் எம்.எஸ் விஸ்வநாதன் இசைமீட்ட பாடலைப் பாடுகின்றனர் சௌந்தரராஜன்,வாணி ஜெயராம். 


நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்

மலரும் நினைவுகள் 11

உலகவரலாற்றில் கிமு,கிபி என இரண்டு அத்தியாயங்கள் பிரிக்கப்பட்டிருப்பது போல் ஈழத்தமிழர்களின் வரலாறும் ஆடி83க்கு முன்,ஆடி83க்கு பின் என இரண்டு அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது.ஈழத்தமிழர்களின் வரலாற்றில்... 1983 ஜூலை 23-ந் தேதி ஒரு திருப்பத்தை எற்படுத்திய நாள். தமிழினத்திற்கு எதிரான சிங்கள ராணுவத்தினர் மீது தமிழர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து... தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு. அந்த அரச பயங்கரவாதத்தைத்தான் "கருப்பு ஜூலை' என்று ஈழத்தமிழர்கள் பதிய வைத்துள்ளனர்.

அந்த "கருப்பு ஜூலை'முந்தநாள் நடந்தது போல் ஓர் உணர்வு எனக்கு ஆனால் அது நிகழ்ந்து தற்போது 30 வருடங்கள் அகிவிட்டன. அன்றைய ஜூலையில் நடந்த கொடூரங்களை தமிழர்கள் இன்னமும் மறந்துவிட வில்லை.

அன்று என்ன நடந்தது?

எழுபதுகளின் தொடக்கத்திலேயே ஈழத்தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திவிட்டனர் என்றபோதிலும், அந்த ஆயுதங்களின் வலிமையை, சிங்கள அரசு 1983 ஜூலை 23 அன்றுதான் உணர்ந்தது. பெரிய அளவில் இராணுவ வீரர்களின் மீது அன்றுதான் கொரில்லாத் தாக்குதல் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் தபால்பெட்டிச் சந்தியில் நடத்தப்பட்டது. இராணுவத்தொடர் வண்டிகளில் வந்துகொண்டிருந்த சிங்கள இராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டனர்.

அடுத்த நாளிலிருந்து இராணுவத்தின் வெறியாட்டம் தொடங்கிவிட்டது. தமிழர்களின் வீடுகள், கடைகள் அனைத்தும் சூறையாடப்பட்டன.கண்எதிரே கண்ட தமிழர்களை சுட்டுத்தள்ளியது சிங்கள இராணுவம். தமிழர்கள் பலர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். நுவரேலியாவில் அன்று அமைச்சராக இருந்த காமினி திசநாயக தானே முன்னின்று கலவரங்களை நடத்தினான். சிங்களக் காடையர்களும் இராணுவமும் சேர்ந்து நின்று தமிழின அழிப்பு வேலையைத் தொடங்கி வைத்தனர். காலையில் தொடங்கிய கலவரம் நடுப்பகலுக்குள் உச்சத்தை எட்டியது. நுவரேலியா நகரமே அக்கினிக் கடலாகக் காட்சியளித்துள்ளது. ஒரு சிறுமி உட்பட பதின்மூன்று பேர் உயிரோடு கொளுத்தப்பட்டுள்ளனர்.

மலையக மக்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரேலியாவில் இப்படி ஒரு நிலைமை என்றால், தமிழீழத்தைத் தாயகமாகக் கொண்ட வடக்கு, கிழக்குப் பகுதிவாழ் தமிழர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை நாம் உணர முடியும்.

1983 ஜூலை கலவரம், உலகம் காணாத இரண்டு கொடூரங்களைக் கொண்டிருந்தது.

1. வெலிக்கடைச் சிறையில் தங்கதுரை, குட்டி மணி, ஜெகன் உள்ளிட்ட 35 தமிழ்க்கைதிகள் கொல்லப் பட்ட விதம்.

2. நடைபெற்ற படுகொலைகள் குறித்து, அன்று அதிபராக இருந்த ஜெயவர்த்தனே வெளியிட்ட கருத்து.

வெலிக்கடைச் சிறையில் இருந்த சிங்களக் காடையர்கள் பலருக்கு 1983 ஜூலை 25ம் நாள், இரும்புத் தடி, உருட்டுக்கட்டை, கத்தி போன்ற கொடிய ஆயுதங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி ஒன்றே ஒன்றுதான். சிறையிலிருக்கும் தமிழ்க் கைதிகளை அடித்து நொறுக்கி கொலைசெய்ய வேண்டும் என்பதே அந்தப் பணி. அதனை அவர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே செய்து முடித்தனர். அச்சத்தில் உறைந்து போய், ஒருமூலையில் ஒடுங்கிக் கிடந்த மயில்வாகனன் என்னும் 19 வயது இளைஞனை வெளியே இழுத்து வந்து அடித்து அடித்தே கொன்றனர்.

வெறுமனே கொலை செய்வது என்பது மட்டுமல்லாமல் பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கி ஒருவனைக் கொல்வது என்பதே அன்று நிகழ்ந்த கொடூரம். அன்று சிறையிலிருந்த மாவீரன் குட்டிமணி, நீதிமன்றத்தில் ஒருமுறை ""நான் இறந்த பிறகு என் கண்களை இரண்டு தமிழர்களுக்குப் பொருத்திவிடுங்கள். மலரப்போகும் தமிழ் ஈழத்தை என் கண்கள் காணட்டும்'' என்று கூறினார்.

அதற்காக அந்த "மாபெரும் தேசத்துரோகக் குற்றத்திற்காக' குட்டிமணியின் கண்கள் இரண்டையும் தோண்டி கீழேபோட்டுக் காலில் மிதித்தனர். கண்களிலிருந்து ரத்தம் கொட்டும் காட்சியைக் கண்டு ரசித்தனர். துடிக்கத் துடிக்கக் குட்டிமணியைக் கொன்று தீர்த்தனர்.

இப்படி அந்தச்சிறை முழுவதும் 35 பிணங்கள் சிதறிக் கிடந்தன. அத்தனை கொடுமைகளுக்கும் பின்பு, அன்று நாட்டின் அதிபராக இருந்த ஜெயவர்த்தனே அளித்த பேட்டியின் சில வரிகள் கீழே உள்ளன.

"இப்போது தமிழர்களின் எத்தகைய அபிப்பிராயத்தைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை. அவர்களைப் பற்றி இப்போது நாங்கள் சிந்திக்க முடியாது. அவர்களின் உயிர்களைப் பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை. அவர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியும் கவலையில்லை.''


தன் சொந்தநாட்டு மக்களை பற்றி, அவர்கள் கொல்லப்படுவதைப் பற்றி, ஓர் இனமே அழிக்கப்படுவதைப் பற்றி அந்த நாட்டின் அதிபர் கவலைப்படவில்லை. அனால் அந்த நாட்டின் இறையாண்மை பற்றியும், அந்த நாடு உடைந்துவிடக்கூடாது என்பது பற்றியும் உலகில் எவ்வளவு பேர் கவலைப்படுகிறார்கள்.குறிப்பாக இந்தியர்கள்.

1983ல் நடந்தது வெறும் கலவரம் அன்று. அது உள்நாட்டுப் போரின் தொடக்கம். இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ்வதில் எற்பட்டுவிட்ட முடிவு. அன்று சிறையில் சிதறி விழுந்தவை குட்டிமணியின் கண்கள் அல்ல.

30 வருடங்கள் ஓடிவிட்டன...தமிழர்கள் வாழ்வில் எத்தனை நாள்கள் கடந்து போனாலும் இந்த நாளை மறக்க முடியாது.. மறக்க கூடாது... நம் தமிழ் உறவுகளின் சுதந்திர வாழ்வை அடியோடு மாற்றிய நாள்.. அவர்களின் ஜனநாயக குரல்வளைகள் நெரிக்கபட்ட நாள்... மண்ணெங்கும் தமிழ் ரத்தம் சிதறி ஓடிய அதிபயங்கர தினம் அது..

ஜூலை 23 ஈழத்தமிழர்களின் கருப்பு நாள்...
சிங்கள இனவாத அரசு நம் தமிழ் சொந்தங்களின் மேல் ஈவு இரக்கமற்ற காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்த நாள்...மறைந்த நம் உறவுகளை வணங்கி... கூடிய விரைவில் நாம் ஒன்றுபட்டு ஒரேதலைமையின் கீழ்நின்று விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசிப்போம்....

23.07.1983 லிருந்து இரண்டு வாரங்கள் தொடர்ச்சியான ஊரடங்குஉத்தரவால் வீட்டில் இருந்தபடி வானொலிமூலமாக செய்திகளை அறிந்தபடி இருந்தோம்.மனதில் பெரும்சோகம் அதனால் ஏற்படும் வெறுப்பு,கோபம்,விரக்தி என்பனவற்றுக்கு மத்தியில் அப்போது வானொலியில் ஒருபாடல் ஒலித்தது .........

இப்போது கேட்டாலும் 1983 ம் ஆண்டு ஆடிமாததிற்கு என்னை அழைத்துச் சென்றுவிடும் இந்தப்பாடல். இப்போதும் மனதில் அழுத்தம்,குழப்பம்,கவலைகள் ஏற்படும்போது இப்பாடலைக் கேட்டவுடன் மனம் சாந்தியடைந்துவிடும்.

ஆனந்தி படத்தில் கவியரசு கண்ணதாசன் கவிவரிகளை எழுத விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைக்க சௌந்தரராஜன் பாட திரையில் நடிக்கிறார் எஸ் எஸ் இராஜேந்திரன்.



நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்

மலரும் நினைவுகள் 13



கடந்த மலரும் நினைவுகள் 12 க்கு ஆகமொத்தம் நான்கு பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்தபடியால் இத்தோடு நிறுத்திக்கொள்ளலாம் என்ற முடிவில் இருந்த எனக்கு இன்று ஒரு முகநூல் நண்பர் வேட்டி அணிந்து பலகோணங்களில் படம்பிடித்து தனது முகநூலில் பதிவிட்டு இருந்தார்.அதைப் பார்த்ததும் மலரும் நினைவுகளை தொடருவோம் என்று முடிவெடுத்து விட்டேன்.தமிழர்களின் தேசிய உடை என்பதாலோ,என்னவோ தெரியவில்லை பெண்களுக்கு தாவணியும்,ஆண்களுக்கு வேட்டியும் பார்ப்பதற்கு மிகமிக எடுப்பாகவும்,அழகாகவும் இருக்கும்.அந்தவகையில் அந்த நண்பருக்கும் அழகாகவே இருந்தது.அவரின் படங்களைப் பார்த்தால் இந்த வேட்டிக்கட்டு அவருக்கு வெள்ளோட்டம் போல் தெரிகிறது.

இவற்றைல்லாம் பார்க்கும்போது 41 வருடங்கள் பின்னோக்கிப் போய் எனது முதல் வேட்டிக்கட்டு பற்றிய சுவையான சம்பவம் மலரும் நினைவுகளாக உங்கள் முன் வருகிறது.1972 ம் ஆண்டு அப்போது நான் ஒன்பது வயது சிறுவன்.அந்தக்காலத்தில் எங்கள் ஊரான சுன்னாகத்தில் உள்ள எமது குலதெய்வமான அம்மன்கோவிலில் இருந்து தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் கோவில் பத்தாம் திருவிழா அன்று பஜனை பாடிக்கொண்டு சுமார் இருபது கிலோமீற்றர் பாதயாத்திரையாகப் (1983 ம் ஆண்டு வரை) போவது வழக்கம்.ஒவ்வொரு ஆண்டும் வீட்டில் அப்பா,அண்ணாமார் போகும்போது நானும் வருவேன் என்று அழுது அடம்பிடிப்பது வழக்கம்.நீண்ட தூரம் நீ நடக்கமாட்டாய்,அடுத்தவருடம் போகலாம் என்று சாக்குப்போக்கு சொல்லிவிடுவார்கள்.அடுத்தவருடம்... அடுத்தவருடம்... என்று தவணை சொல்லி ஏமாற்றியது போதும் என்று இந்தத் தடவை எப்படியும் என்னைக் கூட்டிக்கொண்டுபோகவேண்டும் என்று விடாப்பிடியாக நின்றதால் அவர்களும் இறங்கிவந்து சம்மதித்தனர்.ஆனால் ஒரு நிபந்தனை வேட்டிகட்டிக்கொண்டு வரவேண்டும் என்பதாகும்.வேட்டி என்றதும் சிறிது தயக்கம்,பயம் வந்துவிட்டது என்றாலும் ஒரு அசட்டுத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தலையாட்டி விட்டேன்.

அப்பாவின் சால்வை வேட்டியாக மாறி என் இடுப்பில் வந்து ஒட்டிக் கொண்டது.பெரும் குதூகலத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டேன்.அந்தக் குதூகலம் சிலநிமிடங்களே நீடித்தது.காரணம் சில மீற்றர் தூரம் சென்றதும் ஒருகையை வேட்டியில் பிடித்துக்கொண்டு முதுகை கூனியபடி நடக்கவேண்டிய நிலைமை எனக்கு.சேர்ந்து வந்தவர்கள் சரிசெய்து கட்டிவிட்டனர்.துன்பம் எதற்கு என்று நினைத்து எங்கள் கோயிலில் போய் ஒரு ஓரத்தில் உட்கார்ந்துவிட்டேன்.இரண்டு மணியளவில் செல்வச் சந்நிதிக்கு பாதயாத்திரை புறப்பட்டுவிட்டது.ஆரம்பத்தில் சில நூறு பேர்களுடன் ஆரம்பித்து முடியும்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடிவிடுவார்கள்.சுன்னாகத்திலிருந்து ஆரம்பித்து ஏழாலை தெற்கு,ஏழாலை கிழக்கு,ஏழாலை வடக்கு,குப்பிளான்,புன்னாலைக்கட்டுவன்,வசாவிளான்,அச்சுவேலி,தம்பாலை இன்னும் சிறிய ஊர்கள் வழியாக செல்வச்சந்நிதி கோவிலை இரவு பத்து மணியளவில் சென்றடையும் இந்த பஜனைக் குழு.இடையில் பல வீடுகளில் பல கோவில்களில் சிறிதுநேரம் தங்கி உணவு,குடிவகைகளை உட்கொண்டபடியே மிகவும் குதூகலத்துடனும்,பக்திப்பரவசத்துடனும் அடியார்கள் நடந்து செல்வார்கள்.பார்ப்பதற்கு மிகவும் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.ஆனால் அந்த எட்டு மணிநேரமும் இந்த வேட்டியுடன் நான் பட்டபாடுகளை வார்த்தையில் சொல்லமுடியாது.சிலவேளைகளில் என்னை அறியாமலே அவிழ்ந்து விழுந்ததும் உண்டு.அப்பா பஜனைக் குழுவினருடன் சேர்ந்து பாடிக்கொண்டே வந்தார்.அண்ணாமார் அவர்களின் நண்பர்களுடன் சேர்ந்து போய்விட்டனர்.எனக்கு உதவிசெய்யவென பெரிதாக யாரும் இல்லை.அச்சுவேலியில் எனது பரிதாப நிலையை பார்த்த ஒரு பாட்டி தம்பி இந்த வேட்டியை கழற்றி தலையில் போட்டுக்கொண்டு நட என்றார்.ஒருவாறு செல்வசந்நிதி கோவிலை நெருங்கிவிட்டோம்.

அப்போது இப்ப உள்ளது போல் பாலத்தைக் கடந்து சுற்றி வரவேண்டியதில்லை.காற்றாடி இருந்த இடத்திற்கு அருகே பேருந்து தரிப்பிடம் இருந்தது.அதற்கு குறுக்காக திருவிழாக் காலங்களில் மட்டும் மிகவும் குறுகிய பாலம் கட்டியிருக்கும் அதனூடாக கோயிலை சென்றடையலாம்.நன்றாக இருண்டுவிட்டது காற்றும் பலமாக வீசியது அலைகளும் பலமாக வந்து மோதி நனைத்து விட்டது.சும்மாவே கழன்று விழுகிற வேட்டிக்கு காற்று வேறு.....கோயில் நெருங்குவதால் பஜனையும் சூடு பிடித்துவிட்டது.நான் உடனே ஓடிப்போய் அப்பாவின் கையைப் பிடித்து விட்டேன்.அவரின் ஒருகையில் பஜனைப் புத்தகம்,ஒருகையில் நான்,எனது ஒருகை அப்பாவின் கையோடு,மறுகை கிட்டத்தட்ட முழுவது கழன்றுவிட்டஎனது வேட்டியை பிடித்தபடி எல்லோரின் பார்வையும் சந்நிதியான் மேல் இல்லை.எங்கள்மேல் தான் இருந்தது.நாம் நடந்து போனவிதம் அப்படியொரு கண்கொள்ளாக்காட்சி என்று பார்த்தவர்கள் சொன்னார்கள்.அதேநேரம் அங்கேயிருந்த கடையில் இருந்து ஒருபாடல் மீண்டும் மீண்டும் ஒலித்தது.அப்போது அது மிகவும் பிரபல்யமான பாடல்.நாம் பாலத்தைக் கடந்ததும் எனக்குஅறிமுகமே இல்லாத ஒருவர் சொன்னார் அண்மையில் நான் தமிழகம் போனபோது இப்பாடல் இடம்பெற்ற படத்தினைப் பார்த்தேன்,இப்பாடலில் எம்ஜிஆர்,ஹெலன் ஆடுவது போலவே உங்கள் இருவரின் நடையும் பாலத்தைக் கடக்கும்போது இருந்ததாக சொன்னார்.நடித்தும் காட்டினார்.அங்கிருந்தவர்கள் எல்லோருமே விழுந்து....விழுந்து.... சிரித்தார்கள்.எனவே அழுது,அடம்பிடித்து ஒரு காரியத்தை சாதிக்க முடியாது.மாறாக அவமானத்தையே சந்திக்க நேரிடும்.

சங்கே முழங்கு என்ற படத்தில் கண்ணதாசன் பாடலுக்கு விஸ்வநாதன் இசையமைக்க சௌந்தரராஜன் எல் ஆர் ஈஸ்வரியும் பாடும் பாடலிது 

  .

நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்