May 30, 2014

மலரும் நினைவுகள் 16

தமிழ்த் திரைப்பட உலகில் வரலாறு படைத்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க படம் உலகம் சுற்றும் வாலிபன். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என திரைஉலகின் முப்பெரும் பரிமாணங்களில் மக்கள்திலகம் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட படம் உலகம் சுற்றும் வாலிபன். வெளிநாடுகளில் நடப்பது போல கதையை அமைப்பது சுலபம். ஆனால் கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களுக்கே நடிகர்களை அழைத்துச் சென்று படப்பிடிப்பை நடத்தி அந்தப் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்குவது என்பதை அந்த நாளில் நினைத்துக் கூட பார்க்க முடியாது. தமிழகத்தில் 11.05.1973இல் இப்படம் வெளியாகியது.சுமார் 41 ஆண்டுகளுக்கு முன் ஜப்பான்,தாய்லாந்து,கொங்கொங்,மலேசியா, மற்றும் சிங்கப்பூர் என தென் கிழக்காசிய நாடுகளில் படமாக்கப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் பாடல்கள் அத்தனையும் தேனோடு கலந்த தெள்ளமுது எனலாம். அப்போது இலங்கை வானொலியில் காலை எட்டுமணி தொடக்கம் ஒன்பதுமணி வரை நடைபெறும் பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியில் இப்படத்தின் ஒரு பாடலாவது ஒலிக்காமல் விடாது. இப்படத்தில் உள்ள பாடல்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடல் பிடிக்கும். எனக்குப்பிடித்த இப்பாடல்தான் அப்போது பலருக்கும் பிடித்திருந்தது. வானொலியிலும் இப்பாடலே கூடுதலாக ஒலித்தவண்ணம் இருந்தது. அந்தக்காலத்தில் அநேகமான வீடுகளில் ஓடியோ கசெற் மூலம் பாடல்கள் கேட்கும் வசதிகள் இல்லாதபடியால் இலங்கையில் இருந்த ஒரேஒரு வானொலியான இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்களையே கேட்பது வழக்கம். இதன் சிறப்பம்சம் என்னவெனில் எல்லா வீடுகளிலும் ஒரேபாடல் தான் ஒலிக்கும். வீட்டிலிருந்து பாடசாலைக்குப் போகும்போது ஒருபாடலை முழுமையாகக் கேட்கலாம். இதனால் அப்பாடலை மனப்பாடம் செய்தும்விடலாம். அந்தவகையில் என்னை மிகவும் கவர்ந்த இப்பாடல் எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது.

அப்போது ஐந்தாம்வகுப்பு மாணவனாக இருந்த எனக்கு இந்த உலகம் சுற்றும் வாலிபன் பாடல் புத்தகத்தை எப்படியாவது வேண்டிவிட வேண்டும் என்ற அவா என்னுள் இருந்தது. வீட்டில் கேட்டால் நல்ல மங்களம்தான் கிடைக்கும். நானாகப் போய் வேண்டுவதென்றால் சுன்னாகம் நகருக்குத்தான் போகவேண்டும். அங்கே தனியப்போக விடமாட்டார்கள். காரணம் வாகனப் போக்குவரத்து அதிகம் விபத்து ஏதும் நடக்கலாம் என்ற பயம். எனவே எனது வகுப்பின் படிக்கும் சுன்னாகம் நகரில் வசிக்கும் நண்பன் ஒருவரின் உதவியைநாடி ஒருமணிநேர மதியபோசன இடைவேளையில் அங்கே போய் அப்பாடல் புத்தகத்தை வாங்குவது என்று தீர்மானம் போட்டேன். திட்டமிட்டபடியே நண்பனுடன் சென்று பாடல்புத்தகத்தை வேண்டி நடந்தபடியே புத்தகத்தை விரித்தபடி ஒவ்வொரு பாடலாக பாடியபடி பாடசாலைக்கு திரும்பினேன். இடைவேளை முடிந்து முதலாவது பாடமாக ஆங்கிலவகுப்பு நடைபெற்றது. ஆங்கில ஆசிரியர் பாடத்தை கற்பித்துக்கொண்டிருந்த அதேவேளையில் நானோ கடைசிவரிசையில் அமர்ந்திருந்து ஆங்கிலப்புத்தகத்தில் நடுவே உலகம் சுற்றும் வாலிபன் பாடல் புத்தகத்தை சொருகி வைத்துக்கொண்டு அன்றுகாலை பாடசாலை வரும்போது ஒலித்த அப்பாடலை மனதிற்குள் பாடிக்கொண்டே இருந்தேன். அதேவேளையில் சற்றும் எதிர்பார்க்காமல் வகுப்பறையினுள் நுழைந்த இன்னொரு ஆசிரியர் என்னுடைய கூத்தைக் கண்டுவிட்டார். பின்பு சொல்லவா வேண்டும்? என்னை தண்டித்து மட்டுமல்ல மிகவும் ஆசையுடன் வேண்டிய அந்தப் பாடல்புத்தகமும் பறிபோய்விட்டது. அதையும்விட எனது கூத்தைக் கண்டுபிடித்த ஆசிரியர் எமது அயல்வீட்டுக்காரர் வேறு.

நடந்தது எல்லாவற்றையும் ஒன்றும்விடாமல் எனது வீட்டில் போய் சொல்லிவிட்டார். இதையும்விட பலர் என்னை சுன்னாகம் நகருக்குள் கண்டதாகவும்,எதிரே வாகனங்கள் வருவதைக் கூட கவனிக்காது தலையைக் குனிந்தபடி ஏதோ வாசித்துக்கொண்டு போனதாகவும் தகவல்கள் சுடச்சுட எனது வீட்டுக்கு நான் போகுமுன்பே போய் விட்டது. அன்று காலை ஒலித்த இந்தப் பாடலால் நான் பட்ட அலைச்சல்,அவமானம்,தண்டனை கொஞ்சநஞ்சமல்ல. இருந்தாலும் 41 ஆண்டுகளாகியும் இந்தப்பாடல் என் இதயத்தைவிட்டு நீங்கவே இல்லை. 


அட்டகாசமான ஆரம்ப இசை,அசத்தலான குரல்கள்,அமர்க்களமான பாடல் காட்சி என அத்தனை சிறப்பம்சங்களும் நிறைந்தது. மக்கள் திலகத்துடன் தாய்லாந்து நடிகை மெட்டா ருங்ரட்டா இணைந்து நடிக்க கவிஞர் வாலியின் கவிதைக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை மழையினைப் பொழிகிறார்.


February 16, 2014

மலரும் நினைவுகள் 15

மலரும் நினைவுகள் எட்டாம் பாகத்தைப் போலவே நாம் தலைதெறிக்க ஓடியதொரு மிகவும் சுவாரிசியமான சம்பவம் இன்றைய மலரும் நினைவுகளாக உங்கள் முன் வருகின்றது.1982,1983 இல் வெளிவந்த ஒருபாடல் அப்போது பலராலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.காரணம் இனிமையாதது என்பதையும் தாண்டிக் கிளுகிளுப்பானது.இன்னும் சொல்லப் போனால் மிகவும் விரசமானது என்ற முத்திரை குத்தப்பட்ட பாடல் அது. குறிப்பாக இளைஞர்களை மிகமிக ஈர்த்தபாடல்.ஏன் அவர்களை ஈர்த்தது என்பதற்கான காரணத்தை பாடல்காட்சியைப் பார்க்கும் போது உணர்ந்துகொள்வீர்கள். சகலகலாவல்லவன் என்ற படத்தில் வாலிபக்கவிஞர் வாலி எழுதி இளையராஜா இசைஅமைத்து மலேசியா வாசுதேவன்,ஜானகி ஆகியோர் பாட திரையில் நடிப்பவர்கள் கமலஹாசனும்,அம்பிகாவும்.இது தமிழகத்தில் 1982 இல் வெளியாகி ஓடிக்கொண்டிருந்த அதேவேளையில் ஈழத்தில் தொலைக்காட்சிகள் ஊடாக பலரும் ஓடித்திரிந்து பார்த்தனர் இப்பாடலுக்காகவே எனலாம்.நானும் எனது நண்பர்களும் கூட பார்க்கத் தவறவில்லை.பாடல்கள் மட்டுமல்ல படம் முழுவதுமே ஜனரஞ்சகம் நிறைந்த கிளுகிளுப்பானது.

அடுத்தாண்டு அதாவது 1983 இல் இலங்கையில் திரைக்கும் வந்துவிட்டது.பலரும் தொலைக்காட்சியில் பார்த்தவிட்டனர் எனவே நீண்டகாலம் இது ஓடாது என்று ஆருடம் சொன்னார்கள் ஆனால் ஜனத்திரள் காட்சிகளாக ஓடிக்கொண்டேயிருந்தது.குறிப்பாக இளவயதினரே திரையரங்கில் நிறைந்து காணப்பட்டனர்.காரணம் இது குடும்பமாகப் போய்ப் பார்ப்பதற்கு உகந்தபடம் இல்லை.மற்றது அமைதியாக இருந்து பார்க்கமுடியாமல் இளைஞர்களின் கூச்சல் குழப்பம் போன்றன.நாமும் ஒருதடவை அகன்ற திரையில் போய் பார்ப்போம் என முடிவெடுத்து மிதிவண்டியில் யாழ்ப்பாணம் ராணி திரையரங்கிற்கு போனோம்.வெளியாகி சிலநாட்கள் என்பதால் கூட்டம் அலைமோதியது.நுழைவுச்சீட்டு வேண்டும் போதே எங்கள் குழுவைச் சேர்ந்த சிலருக்கும் இன்னொரு குழுவைச் சேர்ந்தவர்களுக்கும் சிறிய வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.என்ன போதாதகாலமோ தெரியவில்லை பின்பு படம் பார்க்கும் போதுகூட அந்தக்குழுவினர் எமக்கு அருகிலேயே வந்து உட்கார்ந்துகொண்டனர்.

படம் ஓடத்தொடங்கியதும் கூச்சல் போடும் விடயத்தில் எமது குழுவில் இருந்த சில குழப்பவாதிகளுக்கும் மற்றைய குழுவினருக்கும் தகராறு தொடங்கி முற்றிவிட்டதுஅந்தக் குழுவினர் யாழ்ப்பாணம்அதன்  சுற்றுவட்டத்தைச் சேர்ந்தவர்கள்நாமோ வெளியூர்க்காரர் எனவே நாம் சற்று அடங்கிப்போவது நல்லது என்று புத்திமதி சொல்லி எமதுதரப்பு குழப்பவாதிகளை சிறிது அடக்கிவிட்டோம்.பின்பு படம் முடியும்வரை எவ்வித பிரச்சனையும் இன்றி திருப்தியாக படத்தைப் பார்த்துவிட்டு படத்தில்வந்த காட்சிகளைப்பற்றி பேசிக்கொண்டு மிதிவண்டியில் வீடுநோக்கிப் போய்க்கொண்டிருந்தோம்.

கஸ்தூரியார் வீதியூடாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்திற்கு முன்பாக போய்க்கொண்டிருக்கும் போது எதிராக யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி மாணவிகள் சிலர் நடந்துவந்துகொண்டிருந்தனர்.எமது கூட்டத்தைச் சேர்ந்த சிலர் அந்த மாணவிகளைக் கடக்கும்போது இப்பாடலின் இடையேவரும் விரசமான முனகல் சத்தத்தை செய்து காட்டினார்கள்.இதை அருகில் உள்ள மைதானத்தின் அரைக்குந்தில் உட்கார்ந்திருந்த வேறு இளைஞர்கள் பார்த்துவிட்டனர்.உடனே அவர்களுக்கும் எமக்கும் வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பு உண்டாகும் நிலைக்கு வந்துவிட்டது.இந்த இளைஞர்கள் ஏதோ பெரிய ஒழுக்க சீலர்கள் இல்லை,இவர்களும் சைட் அடிக்கவே அதில் வந்து தினமும் குந்தியிருப்பவர்கள்தான்.இதே நேரம் பார்த்து திரையரங்கில் உரசுப்பட்டவர்களும் யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென அங்கு வந்துவிட்டனர்.எமது கஷ்டகாலம்தான் என்னவோ குந்தியிருந்தவர்களும் இவர்களும் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.நாமோ ஆறுபேர் மட்டுமே இப்போது அவர்களின் எண்ணிக்கையோ மிக அதிகம்.அதைவிட நாம் வெளியூர்க்காரர்கள்.அவர்கள் உள்ளூர்க்காரர்கள்.பேசாமல் வாயை மூடிவிட்டு மெல்ல நழுவிப்போவதுதான் நல்லது என்று எம்மை போக விட்டார்களா பாவிகள்......தெருவில் கிடந்த கற்கள்,தடிகளை தூக்கத் தொடங்கவும் நாம் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு ஓடத்தொடங்கிவிட்டோம்.சரி எமக்குப் பயந்து ஓடுகிறார்கள் ஓடித்தப்பட்டும் என்று விட்டார்களா....... அதுவும் இல்லை.திரும்பிப் பார்க்காமல் ஒரே ஓட்டம்தான்.அவர்களும் விடுவதாக இல்லை கற்களால் எறிந்தபடி சிறிதுதூரம் துரத்திக்கொண்டு வந்துவிட்டு பின்பு திரும்பிப் போய்விட்டனர்.


காங்கேசன்துறைவீதி ஊடாக சிறிது நேரத்தில் சுன்னாகத்திற்கு போகவேண்டியவர்கள் கல்லெறிக் கலக்கத்தில் கால்போன போக்கில் சந்துபொந்துகள் ஊடாக பலமணிநேரம் பயணித்து ஒவ்வொருவராக சுன்னாகம் சந்தியில் வந்து மிதந்தோம்.அதற்குப்பின் யாழ்ப்பாணப்பக்கம் தலைவைத்துக்கூடப் படுப்பதில்லை.ஆனால் அவர்கள் எமதுபக்கம் வரட்டும் பழி தீர்க்கலாம் என்று பலநாட்கள் எனது நண்பர்கள் காத்திருந்தார்கள்.அது இறுதிவரை கைகூடவேயில்லை.காரணம் அடுத்த சிலமாதங்களில் தமிழர்பகுதி எங்கும் யுத்த மேகங்கள் சூழ்ந்து பதட்டநிலை உருவாகி விட்டதுடன்,திருநெல்வேலி தபால்பெட்டிச் சந்தியில் வெடித்த நிலக்கண்ணிவெடியுடன் தமிழர்களின் ஒட்டுமொத்த வாழ்வு எல்லாமே வெடித்துச் சிதறிவிட்டது.



நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்

February 3, 2014

ஹலோ

நேற்று தொலைபேசியில் உரையாடும்போது ஒரு நண்பர் கேட்டார் சூப்பர் சிங்கர் இறுதிப்போட்டி பார்க்கவில்லையா என்று,நான் இல்லை என்றேன்.ஏன் என்று கேட்டார்,நான் ஒருபோதும் அதைப் பார்ப்பதில்லை,அதில் ஆர்வம்,விருப்பம் இல்லை என்றேன்.உடனே அவர் ஏன் உனக்கு ஆர்வம்,விருப்பம் இல்லை என்ற கேள்வியை என்னிடம் கேட்காமல்,இதைப் பார்க்காத தமிழர்களே உலகில் இல்லை,இதைப் பார்க்காமல் நீ வாழ்வதில் அர்த்தமே இல்லை,வேறு யாராவது கேட்டால் பார்ப்பதில்லை என்று மட்டும் சொல்லிவிடாதே,எல்லோரும் சிரிப்பார்கள் என்று பெரிய உபதேசம் சொன்னார்.அடுத்து நானாகவே எனக்கு அதில் ஆர்வம்,விருப்பம் இல்லாததற்கான காரணத்தை விபரித்தேன்.

1.அந்த நிகழ்ச்சியில் வரும் நடுவர்கள்,தொகுப்பாளர்களின் தமிழ்ப்பற்று அதாவது தமிழை எவ்வளவிற்கு சிதலமாக்க முடியுமோ அவ்வளவிற்கு சிதலமாக்குகிறார்கள்.ஒரு தமிழ் தொலைக்காட்சியில்,தமிழர்களே பார்க்கும் தமிழ் நிகழ்ச்சியில் எதற்காக ஆங்கிலமும்,தமிங்கிலமும் பேசவேண்டும்.வெள்ளைக்காரன்தான் இவர்களின் அப்பனா?ஆக தொலைக்காட்சியின் பெயரும் தமிழில் இல்லை,நிகழ்சிகளின் பெயரும் தமிழில் இல்லை,அதில் தோன்றுவோரின் பேச்சும் தமிழில் இல்லை,அதுமட்டுமல்ல அவர்கள் அணியும் அரைநிர்வாண உடையும் தமிழினத்திற்கு ஏற்புடையதல்ல பின்பு ஏன் அதை நாம் பார்க்கவேண்டும்?

2.நடுவர்களாக வந்து கொலுவீற்றிருந்து தமிங்கிலம் பேசி எம் தாய்மொழியை சீரழிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழினத்தை கருவறுப்பதையே கடமையாகக் கொண்ட மலையாளிகள்.

3.அண்மையில் இதே விஜய் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு நேயரின் பேச்சினிடையே வந்த தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் வார்த்தையை நீக்கிவிட்டே ஒளிபரப்பினார்கள்.(இது அவருக்கு தெரியாதாம்)

4.ஈழத்தில் தமிழினப்படுகொலைகள் நடந்தபோதும் சரி,அதைதொடர்ந்து நடந்துவரும் எம்மக்களின் அவல வாழ்வினையும் தமிழகத்தின் பிரதான தொலைக்காட்சிகள் இருட்டடிப்பு செய்தே வருகின்றன.மாறாக நடிகைகளின் திருமணம்,முதலிரவு,கர்ப்பமடைதல்,குழந்தைப்பேறு பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.

இப்படியான தமிழின விரோத ஊடகங்களையா நாம் ஆதரிக்கவேண்டும்?முற்றாகப் புறக்கணியுங்கள் அல்லது பணத்தை செலவிடாமல் பார்க்கமுடியுமென்றால் பாருங்கள்.ஒரு சல்லிக்காசு கூட இப்படியான ஊடகங்களுக்கு கொடாதீர்கள்.தமிழர்களின் உரிமை மற்றும் உணர்வுப் போராட்டங்களை இத்தனை காலம் மழுங்கடித்து வந்த கிரிக்கெட் சூதாட்டம்,கூத்தாடி நடிகர் நடிகைகள்,திரைப்படங்களை தொடர்ந்து அந்த வரிசையில் இப்போது 'சூப்பர் சிங்கர்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியும் இடம்பிடித்துள்ளது. கேள்வி கேட்காமல் அடிமையாக இருக்கவே பழகிவிட்ட ஒரு இனம் இன்னும் எத்தனை காலம் தான் அடிமையாகவே இருக்குமோ???????????????????????????????????

January 19, 2014

மலரும் நினைவுகள் 5



கடந்த மலரும் நினைவுகள் நான்கு பாகத்திலும் என் வாழ்க்கையில் முதன்முதலில் நடந்தேறிய சம்பவங்களே இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்தத்தடவை சற்று மாறுதலாக நம் பெரியோர்கள் சொல்லும் அறிவுரையை செவிமடுக்காமல் இருந்துவிட்டு பின்பு ஒருகாலம் அந்தப் பெரியோர்களையும்,அவர்களின் அறிவுரைகளையும் நினைத்துப் பார்க்கும் எனக்கும், என் போன்றோருக்கும்,முக்கியமாக தங்கள் தாய்நாட்டில் வாழும் எம் தமிழ் இளையதலைமுறையினருக்கும் இந்த மலரும் நினைவுகள் சமர்ப்பணம்.................
1976
ம் எமது பாடசாலையின் உப அதிபர் அவர் பணியிலிருந்து இளைப்பாறுவதையிட்டு அவருக்கு நடந்த பிரியாவிடை வைபவத்தின்போது பெரும்திரளாக சனங்கள் குழுமியிருந்த அந்த மண்டபத்தினுள் உப அதிபர் தன்கரங்களைக் கூப்பி சிரித்தபடி நுழைகிறார்....... குழுமியிருந்தவர்கள் எல்லோரும் எழுந்து நின்று கைகளைத்தட்டி அவரை வரவேற்கிறார்கள்...........

அப்போது யாரும் எதிர்பார்த்திராத ஒரு இனிமையான ஆரம்ப இசையுடன் அர்த்தங்கள் நிறைந்த அற்புதமான புத்தம்புதிய கானம் மண்டபமே அதிரும்வண்ணம் ஒலிக்கிறது.மற்றவர்கள் ரசித்தார்களோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் சிறுவனாக இருந்த என் மனதில் அது கல்லின்மேல் எழுத்தாக பதிந்தேவிட்டது எனலாம். பின்பு மேடையேறிப் பேசிய அந்த உப அதிபர் தனது பேச்சின் போது அந்தப் பாடலில் சொல்லப்பட்டுள்ள கருத்தினை சுருக்கமாக சொன்னார் ஆனால் பெரும்பாலானவர்கள் அதை காதில் போட்டுக்கொள்ளவேயில்லை.எனக்கு என்னவோ அந்தப்பாடல் மறக்கமுடியாத ஒரு பாடலாகவே மனதில் பதிந்துவிட்டது. அவன் ஒரு சரித்திரம் என்ற படத்தில் கவியரசு கண்ணதாசன் கவி புனைய மெல்லிசைமன்னன் விஸ்வநாதன் இசை மீட்டிட சௌந்தரராஜன்,சுசீலா குரல்கொடுக்க உருவானது இந்தக்கானம்.இந்தப்படம் இலங்கையில் திரையிடப்படாததால் தான் என்னவோ இப்பாடல் இலங்கை வானொலியிலோ,ஒலிபெருக்கிகளிலோ மிகமிக அரிதாகவே கேட்டிருக்கிறேன்.அப்பன் இல்லாதுவிட்டால் தான் அப்பனின் அருமை தெரியும் உப்பு இல்லாது விட்டால் தான் உப்பின் அருமை தெரியும் என்று ஒரு பழமொழி உண்டு.அதுபோல் நாம் எமது தாய்மண்ணில் வாழும் போது அந்த மண்ணின் மகிமை, எமது பண்பாடு கலாச்சாரம் போன்றனவற்றின் அருமைபெருமைகளை ஒரு அந்நியமண்ணில் வந்து வாழும் போதே உணருகின்றோம். எந்த ஒரு மனிதனும் அவன் சொந்த மண்ணில் வாழ்வது தான் ஒரு கௌரவமான வாழ்க்கை என்பது அந்நிய நாட்டில் வாழும் நான் பட்டறிந்த உண்மையாகும்.இந்தப்பாடலிலும் மேலைநாட்டுக்கு சென்று படித்து தன் தாய்நாட்டுக்கு திரும்பிவரும் பெண்ணை மேலைநாட்டுப் பாணியில் வரவேற்கும் மேலைநாட்டு நாகரிகமோகம் கொண்ட கூட்டத்தினருக்கு மேலைநாட்டு அலங்கோலத்தையும் நம் நாட்டு அன்பையும் ஒப்பிட்டு சொல்கிறாள். "வண்ணத்திலகங்கள் ஒளிவீசும் முகங்கள் எங்கள் திருநாட்டுக் குலமாதர் நலன்கள் அன்புத் தெய்வங்கள் இன்பச் செல்வங்கள் ஆடும் கலையாகுமோ பாடும் தமிழாகுமோ" மேலும்"அன்னைத் தாய்ப்பாலை பிள்ளைக்குக் கொடுத்து அன்புத் தாலாட்டுப் பாட்டொன்று படித்து காணும் அழகென்ன தேடும் சுகமென்ன சொல்ல மொழி இல்லையே பேச விலை இல்லையே" இதற்கு மேலும் எம் தமிழினத்தின் சிறப்பை எடுத்துக் கூற வார்த்தைகள் இருந்தால் தயவுசெய்து சொல்லுங்கள்?????????????????????

பாடலைப்போலவே பாடல்காட்சியில் நடிகர்திலகம் சிவாஜி கணேசனும் காஞ்சனாவும் மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர்.வணக்கம் என்று சொல்வதையே அநாகரிகம் என்று கருதி ஹாய் என்று சொல்லும் காவாலிகளே கவனத்தில் கொள்ளுங்கள். 


நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்