September 3, 2011

மூவரது மரணதண்டனையை மீள்பரிசீலனை செய்யக் கோரும் தீர்மானம் - சபாநாயகர் அனுமதி மறுப்பு

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோரும் தீர்மானத்தைக் கொண்டுவர பாண்டிச்சேரி சட்டமன்ற சபாநாயகர் அனுமதி மறுத்துள்ளார். இதையடுத்து அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர். 

பாண்டிச்சேரி சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது, மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனையை குடியரசுத் தலைவர் மீளாய்வு செய்ய வேண்டும் என்று கோரும் பிரேரணை மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக, திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த விவகாரம் குறித்துப் பேசுவது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று கூறி அனுமதி அளிக்க மறுத்து விட்டார் சபாநாயகர் சபாபதி. 

இதையடுத்து திமுக உறுப்பினர்கள் இருவரும் முதலில் வெளிநடப்புச் செய்ய அவர்கள் பின்னால் அதிமுக உறுப்பினர்கள் ஐவரும் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக சட்டமன்ற குழுத் தலைவர் அன்பழகன், ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். அத்துடன் போர்க்குற்றங்கள் புரிந்த சிறிலங்கா அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடைவிதிக்கக் கோரும் தீர்மானத்தையும் கொண்டு வரவிருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment