September 3, 2011

இராணுவத்தினரால் தொடர்ந்து தாக்கப்படும் யாழ் மக்கள்:கிறீஸ் மனிதர் விவகாரம்


கிறீஸ் மர்ம மனிதன் பற்றிய அச்ச உணர்வு யாழ் மக்களிடையே பெரிதும் அதிகரித்துள்ளது.கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் நாவந்துறையில் கிறீஸ் மர்ம மனிதன் நடமாட்டம் தொடர்பில் இராணுவத்தினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையின் போது பல தமிழ் மக்கள் தாக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கொக்குவில், திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றதுடன், இது தொடர்பில் பொதுமக்கள் தமது அச்சநிலைமையை இராணுவத்தினரிடம் எதிர்ப்பாக காட்ட முனையும் போது , இராணுவத்தினரால் தாக்கப்பட்டுவரும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.வாரக்கணக்கில் மர்ம நபர்கள் பற்றீய பிரச்சினை தொடர்கிறது. இதுவரை பொலிஸார் இதனை தடுப்பதற்கு எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.  மர்ம மனிதன் வந்து ஒரு சில நிமிடங்களில் அங்கு இராணுவத்தினரும் வந்துவிடுகின்றனர்.

மர்ம மனிதன் வரும் போது திட்டமிட்டது போன்று மின்சாரமும் தடைப்பட்ட்டு விடுகிறது. மர்ம மனிதன் தொடர்பிலான அச்சத்தினால், இரவு முழுவதும் தூக்கமில்லாமல் இருந்தால், மறுநாள் வேலைக்கு செல்ல முடியாது.மறுநாள் சாப்பாட்டு செலவிற்கே திண்டாடிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் துரத்தி செல்லும் மர்ம மனிதனை சேர்ந்து துரத்திப்பிடித்து பொலிஸாரிடம் அவர்களை ஒப்படைக்க இராணுவத்தினர் முயல்வதில்லை. மாறாக துரத்தி வருகின்ற மக்கள் மீது தங்கள் காடைத்தனத்தை காட்டுகிறார்கள்என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கொக்குவில் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.  இராணுவத்தினரால் தாக்கப்பட்டு காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டவர்களையும் பாராளுமன்ற உறுப்பினர் சென்று பார்வையிட்டார்.

இச்சந்திப்பின் பின்னர் அவர் கருத்து தெரிவிக்கையில்

ஒரு மாதத்திற்கு முன்பாக மலையகத்தில் கிறிஸ் மனிதன் பயங்கரம், பின்பு அம்பாறை, மட்டக்களப்பு, எனப் பரவி இப்போது வடமாகாணத்தையும் வந்து சேர்ந்துள்ளது.கிறிஸ் மனிதனின் பயங்கரம் நிகழ்ந்தேறிய எல்லாப் பகுதிகளிலுமே மக்கள் ஒன்று திரண்டு கிறிஸ் மனிதர்கள் சிலரைப் பிடித்துள்ளனர், பொலிஸாரிடமும், இராணுவத்திடமும், கையளித்துமுள்ளனர்.

ஆனால் இவைகள் எல்லாம் கட்டுக் கதைகள் என்றும் வெறும் வதந்திகள் என்றும் பொலிஸாரும் இராணுவத்தினரும் மீண்டும் மீண்டும் சொல்லி வருகின்றனர்.பொதுமக்களால் பிடித்து ஒப்படைக்கப்படும் மர்ம மனிதர்கள் எல்லோரும் பெரும்பான்மைச் சமுகத்தைச் சார்ந்தவர்களாகவுள்ளனர். இறுதியாக இவர்கள் மனநோயாளியாகச் சொல்லப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்.ஆனால் இவர்களைப் பிடிக்க முயலும் அல்லது இவர்களைப் பிடித்து ஒப்படைக்கும் அப்பாவிப் பொதுமக்கள் பொலிஸாராலும், இராணுவத்தினராலும் மிருகத்தனமாக தாக்கப்படுகின்றனர்.  இவ்விவகாரம் நன்கு பயிற்றப்பட்டவர்களினால் திட்டமிடப்பட்ட முறையில் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

இவ்வாறான பரவலான தாக்குதலை மேற்கொள்ளக் கூடிய பலம், யாரிடம் இருக்கின்றது என்பதையும் இங்கு நிலைகொண்டிருப்பவர்கள் யார் என்பதையும் மக்கள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றார்கள்,எனவே ஜனாதிபதி இவற்றை உடனடியாக நிறுத்தி தமிழ் மக்களை அச்சத்தின் பிடியில் இருந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கின்றது என்றார்.

இதேவேளை இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில், யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா கருத்து தெரிவிக்கையில்,

கொக்குவிலில் பேருந்தை தாக்கிய ஆறு சந்தேக நபர்களையே பொலிஸார் கைது செய்தனர். வேறு யார் மீதும் தாக்குதல் நடத்தவில்லை. கிராமத்தில் நடந்த விழாவொன்றில் குடித்துவிட்டு ஆட்டம் போட்டு கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் தான் பேருந்தை தாக்கியுள்ளனர்.மற்றும் படி கிறீஸ் மனிதன் என்று ஒருவரும் இல்லை. முறைப்பாடு கிடைத்ததும் நாங்கள் சென்று விசாரிப்போம். மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் யாரையும் அடையாளம் காட்டுகிறார்கள் இல்லை.

தனிநபர் பாதுகாப்பு விடயத்தில், மரணம் அல்லது காயம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் மட்டும் தற்பாதுகாப்பிற்காக தாக்க முடியும். ஓடுகிறவர்களை துரத்தி சென்று தாக்க முடியாது என தெரிவித்தார்.உடனடியாக அங்கிருந்த பத்திரிகை நிருபர் ஒருவர்,  ஓடுகிறவர்களை அடிக்க முடியாது என்றால் ஓடுகிறவர்கள் யார்? எங்கிருந்து ஓடுகிறார்கள் என கேட்டார். மேலும் கிறீஸ் மனிதன் என்ற பரபரப்பு தொடங்கியதும் அந்த இடத்திற்கு இராணுவத்தினர் எப்படி இவ்வளவு வேகமாக வருகிறார்கள்? எதற்காக வருகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு சரியாக பதில் சொல்ல முடியாது போலிஸ் அதிகாரி திணறியுள்ளார். வதந்திகளை பரப்புகிறவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கூறி முடித்துக்கொண்டார்.

No comments:

Post a Comment