June 27, 2011

அவன் இவன்

சாதாரண சூழலில் காணக்கிடைக்காத அசாதாரண விளிம்புநிலை மனிதர்களைப் படமாக்கும் பாலா இந்த முறையும் கிட்டத்தட்ட அதே மாதிரியான மனிதர்களோடு களம் இறங்கியிருக்கிறார். திருட்டு தொழிலையே குலதொழிலா கொண்டிருக்கிற ஒரு கிராமம். அந்த கிராமத்துல எல்லாத்தையும் இழந்து நிக்குற ஒரு ஜமீனுக்கு காலம் முழுக்க விசுவாசமா இருக்குற மனிதர்களை பற்றிய படம்.
படத்தோட ஓப்பனிங் விஷாலோட பரபரன்னு இருக்குற நடனத்தை பார்த்தவுடனே சீட்ல இருந்து கொஞ்சம் நிமிர்ந்து உக்கார வைக்கிற இயக்குநர், அடுத்த பத்தாவது நிமிஷத்துல கொட்டாவி விட வைக்கிறாரு...
கதாபாத்திரங்களை வித்தியாசமா காட்டணும், ரசிகனுக்கு அது என்ன? எதுக்கு?ன்னு கேள்வி கேட்க வைக்கிற அளவுக்கு ஒரு எதிர்பார்ப்பை உண்டு பண்ணனும்னு நெனைக்கிறதெல்லாம் சரிதான். ஆனா அதுக்கான காரணங்கள் சரியானதா இருக்கணும். இந்தப் படத்துல அப்படி சரியான காரணங்கள் எதுவுமே இல்லை.
விஷால்-ஆர்யாவோட அப்பா அனந்த் வைத்தியநாதன். அவருக்கு அம்பிகா-பிரபா ரமேஷ்னு ரெண்டு பொண்டாட்டிகள், முதல் பொண்டாட்டி அம்பிகாவோட புள்ளை விஷால், ஆர்யா ரெண்டாவது பொண்டாட்டி பிரபா ரமேஷோட புள்ளை. ஆக ரெண்டு பேரும் அண்ணன் - தம்பி. விஷால் இந்தப் படத்துல 'வால்டர் வணங்காமுடி'ங்கிற பேர்ல ஒரு அரவாணியா வர்றாரு, அவர் எப்படி அரவாணியா ஆனாரு..? அந்த டோரி கண்கள் எதுக்கு? ஒருவேளை அவரை வித்தியாசமா காட்டுறதுக்கா..? இல்லேன்னா படத்தோட கதாபாத்திரத்துக்காகவா..? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்களே இல்லை.
பாலாவின் படங்களில் ஒரு பொதுத்தன்மை இருக்கும். அவருடைய கதாபாத்திரங்களுக்கென எனத் தனியாக சில விஷயங்களை வைத்திருப்பார். வெகு கலகலப்பாக ஒரு கதாபாத்திரம் காட்டப்பட்டால் கண்டிப்பாக அது மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் அல்லது இறந்து போகும். படம் முடிந்து வரும்போது பார்ப்பவர்களின் மனதில் ஒரு வெறுமையை உணரச் செய்வதே பாலாவின் படங்களின் உத்தி. 'சேது'வில் பாண்டிமடத்துக்குப் போகும்முன்பு விக்ரமை சிரித்தபடி ஒரு குளோசப் ஷாட் காட்டுவாரே.. அதே போலத்தான் 'பிதாமகனில்' சூர்யாவின் மரணமும் 'நான் கடவுளில்' காட்டப்படும் பிச்சைக்காரர்களின் உலகமும். 'நந்தா' பார்ப்பவர்கள் மனதை கனக்கச் செய்யும் அவருடைய முதல் நான்கு படங்களில் ஆதாரமாக ஒரு கதையும் அழுத்தமான சம்பவங்களும் இருக்கும். 'அவன் இவனில்' இது எதுவுமே இல்லை என்பதுதான் பிரச்சினை.
எதை நோக்கி நகர்கிறது என்றே தெரியாத முதல் பாதி. விஷால் கலைஞனாக விரும்பும் திருடன். ஆர்யா பிழைப்புக்குத் திருடும் கேனையன். இருவரும் ஒரே அப்பாவின் வெவ்வேறு மனைவிக்குப் பிறந்தவர்கள். சண்டை போடுகிறார்கள். ஹைனஸ் என்றழைக்கப்படும் ஜி.எம்.குமாரோடு நெருக்கமாக இருக்கிறார்கள். நடுநடுவே காதலிக்கிறார்கள். பெரிய தவறொன்று செய்யும்போது இடைவேளை. பிறகு இரண்டாம் பாதியில் மறுபடியும் சும்மா சுத்துகிறார்கள். கடைசி பதினைத்து நிமிஷத்துக்கு முன்னாடி ஒரு வில்லன் வருகிறான். குமார் சாகடிக்கப்படுகிறார். பழிக்குப் பழி. சுபம்.
வெகு சாதாரணமான இந்தக் கதைக்கு பாலா தேவையா? பாலாவின் படமென்றால் இதெல்லாம் இருக்கும் என அவர் உருவாக்கிய பிம்பமே அவருக்கு இந்தப் படத்தில் மிகப்பெரிய எதிரியாக மாறியிருக்கிறது.
இந்தப்படத்தின் திரைக்கு முன்பான நாயகர்கள் இருவர். முதலில் விஷால். மாறுகண், குரலில் இருக்கும் இளகிய தன்மை, சட் சட்டென்று மாறும் பாவனைகள், பெண்களைப் போல அவர் வெளிப்படுத்தும் உடல்மொழி என நிறைய சிரமப்பட்டிருக்கிறார். சூர்யாவின் முன்பு விதவிதமாக நடித்துக் காட்டும் இடத்தில் பிரித்து எடுத்திருக்கிறார்.
இரண்டாவது நாயகன் ஜி.எம்.குமார். அவருடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம் பிரமாதம். எல்லாவற்றையும் இழந்தபின்னும் தன்னை நாட்டின் ராஜாவாக நம்பிக் கொண்டிருக்கும் குழந்தைமையும் தனக்கென மக்கள் வேண்டுமெனத் தேடியலையும் பதட்டமும் கலந்து உருவாக்கப்பட்டு இருக்கும் அவர்தான் படத்தின் மிக முக்கியமான மனிதர். நிர்வாணமாக இவர் காட்சியில் காட்டப்பட்டது தேவையற்ற ஒன்று. அதன் அவசியத்தன்மை அந்த இடத்தில் இல்லவே இல்லை. சும்மா வித்தியாசமா செய்யணும் என்று பாலா செய்தார் போலவே தெரிகிறது.
'கும்பிடுறேன் சாமி'யாக வரும் ஆர்யா ஓவர் சவுண்ட். 'பிதாமகன்' சூர்யாவின் ஜெராக்ஸ் மாதிரி இருக்கிறார். அவருடன் கூடவே வரும் சிறுவனின் செய்கைகள் முழுக்க முழுக்க எரிச்சல். மருந்துக்குக் கூட லாஜிக் பார்க்காத கதாநாயகிகள் ஜனனியும் மது ஷாலினியும். போலீஸ் ஏட்டான ஜனனி திருட்டுப் பயலான விஷாலை காரணமே இல்லாமல் காதலிக்கிறார் என்றால் மது ஷாலினிக்கோ ஆர்யா குட்டிக்கரணம் அடிக்கச் சொல்வதால் காதல் வருகிறது. கெரகம்டா. இன்னும் எத்தனை படத்தில்தான் கல்லூரிக்குப் போகும் பெண்ணை அடாவடி நாயகன் கூப்பிட்டு மிரட்டிக் காதலிப்பதைக் காட்டுவார் பாலா? படத்தில் நேர்மையாக கெட்டப் இருக்கும் ஒரே பாத்திரம் அம்பிகாவினுடையது. பீடி பிடிக்கிறார். மகன் அடிக்கும் குவார்ட்டரில் பங்கு கேட்கிறார். எல்லாவற்றையும் விட ஆர்யாவை அவர் அடிக்கும் கிண்டல்கள்.. அதிரடி.
வில்லனாக வரும் ஆர்.கே. வழக்கமான பாலாவின் படங்களில் வரும் கொடூரத்தனத்தை கண்முன்னே நிறுத்துகிறார். திரிபாதியை மலைமேல் அம்மணமாக அடித்துக் கொல்வது, மரத்தில் கட்டி தொங்க விடுவது என குரூரமாய் காட்சியளிக்கிறார்.
பாத்திரத்திற்கான கதையில் ஹீரோயின்கள் இருவரும் இல்லாதிருப்பதால் அவர்களின் நடிப்புத்திறன் இந்த படத்தில் வெளிப்படவில்லை. ஆனால் சற்று கூடுதலான நேரம் வரும் ஜனனி ஐயரின் நடிப்போ பெரிசாக எடுபடவில்லை. செயற்கைத்தனம் கூடுதலாக தெரிகிறது. மற்றொரு நடிகை மதுசாலினுக்கோ திரையில் தோன்றும் நேரம் மிக குறைவு. ஆனால் ஜனனி ஐயரை விட நடிப்பிலும் அழகிலும் இருபடி மேல்தான்.
ஒரு சின்னப்பையன் போலீசை 'ஏவ் சொட்டத்தலை'ன்னு சொல்லி கிண்டல் பண்றது, புரமோஷன் கெடச்சதுக்காக ஒரு போலீஸ் திருடன்களுக்கெல்லாம் ஸ்டேஷனுக்குள்ளேயே கெடாவெட்டு பிரியாணி போடுறது, அந்த விழாவுக்கு வர்ற திருடன்கள் எல்லாரும் போலீஸ் ஸ்டேஷன்லேயே சரக்கடிச்சிட்டு கும்மாளம் போடுறது, இப்படி நிஜத்துல நாம பார்த்திராத, கேள்விப்படாத விஷயங்கள் படத்துல நெறைய உண்டு.
அதேமாதிரி ஒருகோடி ரூபாய் மதிப்புள்ள சந்தனக்கட்டைகளை கடத்திட்டுப் போறது விஷால், ஆனா ஆர்யாவையும் அவன் கூட்டாளி சின்னப் பையனையும் போலீஸ் பிடிச்சி விசாரிக்குது. அதுக்குப் பொறவு அந்த விவகாரம் என்ன ஆச்சின்னே தெரியல. இதுக்கிடையில சூர்யா கெஸ்ட்ரோல்ல வந்து இந்தப்படம் மூலமா தன்னோட 'அகரம் பவுண்டேசனுக்கு' விளம்பரம் வேற தேடிக்கிட்டு போறாரு.
முதல் பாதி சம்பவங்களின் கோர்வையை கொஞ்சமாவது ரசிக்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் எஸ்ராவின் வசனங்கள். தொடர்ச்சியாக சிரித்துக் கொண்டே இருக்கிறோம். ஆனாலும் பெண்கள் அணியும் பேண்டில் ஜிப் இருக்குமா என்கிற ரீதியிலான வசனம் எல்லாம் தேவையில்லை என்றே தோன்றுகிறது. யுவனின் 'டியோ டியோ டோலே'வுக்கு விஷால் போடும் கெட்ட ஆட்டத்தில் தியேட்டரே குலுங்குகிறது. பின்னணி இசையும் ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவும் படத்துக்குத் தேவையான மூடைக் கொடுக்கின்றன.
ஒட்டுமொத்தமாக படத்தை சரியில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் பரவாயில்லை ரகம்தான். முதல்பாதி கலகலப்பாக செல்கிறது. இரண்டாம்பாதி கொஞ்சம் வேகத்தோடு கலகலப்பாக செல்கிறது. சொல்ல வந்ததை சொல்ல இப்பிடி மெனக்கெட்டு படம் எடுக்க தேவையில்லை என்பது ஒரு புறம் இருக்க கடைசியில் வந்த பல காட்சிகள் தேவையற்று வேண்டுமென்றே கதையை சொல்லி முடிக்க உருவாக்கப்பட்டது போல உணர்வை தருகின்றது.
விஷால் தனது பிலிமோகிராபியில் இந்த படத்தை தனது பெஸ்ட் என்று மார்தட்டிக்கொள்ளலாம்... என்னதான் படத்தை பற்றிய எதிர்மறை விமர்சனங்களை காதில் வாங்கினாலும் விஷாலின் உடல்மொழிக்கு இந்த படத்தை சினிமா ரசிகர்கள் நிச்சயம் பார்க்க வேண்டும்..பெண்சாயல் மற்றும் ஆண்சாயலுக்கு அவர் திடும் என்று மாற்றும் உடல்மொழிகள் அற்புதம்.
எதிர்பார்ப்புகள் ஏராளமாகும்(High Expectations lead to Frustrations) போது ஏமாற்றங்கள் தவிர்க்க முடியாததுதான். எந்த ஒரு படைப்பாளியும் சுதந்திரமாய் சிலவற்றை செய்ய விரும்புவார்கள். பரிசோதனைகளை செய்வதில் சிறந்தவர் பாலா. பல விமர்சனங்கள், எதிர்மறை கருத்துக்கள், விருதுகள், தோல்விகளுக்கு பின்பும் அவர் தன் நிலைபாட்டிலிருந்து எந்த விதத்திலும் மாறவில்லை என்பதை காட்டுகிறது. இப்படிப்பட்ட சில கருத்துக்களால் பாலா ஏதேதோ செய்யப் போய் மீண்டும் தனது பழைய பாணிக்கே வந்துவிட்டதுக்கு 'அவன் இவன்' நிதர்சனம்.

No comments:

Post a Comment