July 13, 2011

ரஷ்ய விண்வெளி ஓடமும் அமெரிக்க விண்வெளி ஓடமும் மோதும் அபாயம்

விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் செயற்கைக்கோள் பாகம் மோதும் வாய்ப்புள்ளதால் அட்லாண்டிஸ் விண் ஓடத்துக்கு ஆபத்து எதுவும் ஏற்படும் நிலையுள்ளது.

அட்லாண்டிஸ் விண் ஓடத்தை அமெரிக்கா சமீபத்தில் விண்ணில் செலுத்தியது. இந்த விண் ஓடம் விண்ணில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாகத் தன்னைப் பொருத்திக் கொண்டுவிட்டது. விண்நிலையத்தை உருவாக்குவதற்கான பாகங்களை 12வது முறையாக அட்லாண்டிஸ் எடுத்துச் செல்கிறது.

இந்நிலையில் 1970ம் ஆண்டு செலுத்தப்பட்டு இப்போது செயலிழந்து விண்ணில் மிதந்து கொண்டிருக்கின்ற ரஷிய செயற்கைக்கோளின் ஒரு பாகமானது அட்லாண்டிசும், சர்வதேச விண்வெளி நிலையமும் உள்ள இடத்துக்கு மிக நெருக்கமாகப் பறந்து வருவது தெரிய வந்திருக்கிறது. இதன் அளவு இன்னும் சரியாகத் தெரியவில்லை.

இது அட்லாண்டிஸில் அல்லது சர்வதேச விண்நிலையத்தில் மோதினால் அவற்றுக்கு மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கக் கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறினர். அட்லாண்டிஸ் சர்வதேச விண்நிலையத்தின் அருகில் முக்கால் கிலோமீற்றர் சுற்றளவுக்குப் பாதுகாப்பு வளையம் ஒன்றை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை விண்வெளி வீரர்கள் பழுதடைந்துள்ள ஒரு பம்ப்பை சரி செய்ய விண் வெளியில் நடக்க இருக்கிறார்கள். அப்போது விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் ரஷிய செயற்கைக்கோள் பாகம் இவர்களுக்கு மிக நெருக்கமாக மிதந்து வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் அது இவர்களை மோதுமா என்பது தெரியவில்லை.

அவசியம் ஏற்படுமேயானால் விண் ஓடத்தை உந்துசக்தி கொடுத்து சற்றே இடம்பெயரச் செய்யவும் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் விண்வெளி வீரர்களுக்கு ரஷிய செயற்கைக்கோளின் பாகம் இடைஞ்சலாக இருக்காது என்றே விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அதனால் அவர்களுக்கு ஆபத்து எதுவும் நேராது என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

பல்வேறு நாடுகளிலிருந்து பல ஆண்டுகளாக விண்வெளியில் பல செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டு வருகின்றன. இவை காலாவதியான பின்னரும் தொடர்ந்து விண்ணில் மிதந்து வருகின்றன.

இதுபோல விண்ணில் மிதக்கும் 22 ஆயிரம் செயற்கைக்கோள் பாகங்களையும் பொருள்களையும் விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மணிக்கு 17 ஆயிரம் கி.மீ வேகத்தில் விண் நிலையமும் அட்லாண்டிசும் பூமியைச் சுற்றி வருகின்றன. இந்த வேகத்தில் செல்லும் போது விண்ணிலுள்ள மிகச் சிறிய இரும்புத்துகள் கூட மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திவிடும்.
சர்வதேச விண்நிலையத்தில் இப்போது அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 விண்வெளி வீரர்கள் உள்ளனர். இந்த விண்நிலையத்தின் பகுதிகள் ஒவ்வொன்றாக பூமியிலிருந்து பல முறை விண் ஓடங்களில் எடுத்துச் செல்லப்பட்டு கட்டப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment