January 17, 2014

மலரும் நினைவுகள் 1



புலம்பெயர்தேசத்தின் இயந்திரமயமான அவசரவாழ்க்கை, தனிமை, மனம்விட்டு பேசமுடியாமை போன்ற பிரச்சனைகளால் அமுங்கிப்போன மனதிற்கு கிடைக்கும் அருமருந்துகளில் ஒன்றுதான் இந்த மலரும் நினைவுகள். இந்த மலரும் நினைவுகளுக்கு நண்பர்களாகிய உங்களிடமிருந்து நல்ல ஆதரவுகிடைக்கும் பட்சத்தில் இதைத் தொடர்ந்து பல பாகங்களாக எழுதலாம் என நினைக்கிறேன்.இனிமையான அந்த இளமைக்கால வாழ்வினை  மீண்டும் மீண்டும் அசைபோட்டு பார்ப்பதில் கிடைக்கும் சந்தோசம்,ஆறுதல் ஒரு அலாதியானது. சிறுவயதில் பெற்றோருடனும்,பாடசாலை மூலமாகவும் படம் பார்ப்பதாயின் பக்திப்படங்களுக்கு மட்டுமே கூட்டிக்கொண்டு செல்வார்கள்.அதுவும் சிறிய வகுப்பைச் சேர்ந்தவர்களை கூட்டிச்செல்ல மாட்டார்கள்.எனது மூத்த உடன்பிறப்புக்கள் பாடசாலை மூலமாகப் பார்த்துவிட்டனர்.எனவே நான் எனது அப்பாவுடன் போய் பார்ப்பதென்று முடிவாகிவிட்டது."படம் பார்ப்பது" என்ற சொல்லைவைத்து யாரிடமும் அதுபற்றிய விளக்கம் எதுவும் கேட்கவில்லை.எனது கற்பனை எப்படி இருந்தது என்றால் நாம் எல்லோரும் ஒரு மண்டபத்தினுள் குழுமியிருக்க முன்னால் இருக்கும் மேடையில் ஒருவர் நின்று ஒவ்வொரு படங்களாக எமக்கு எடுத்துக்காட்டுவார் என்பதேயாகும்.படம் திரையில் ஓடத்தொடங்கியது திரைக்குப்பின்னால் நின்று நடிக்கிறார்கள் என நினைத்தேன்.படம் முடிந்து வெளியே வந்ததும் திரைக்குப்பின் வெளியே ஒரு கொட்டகையில் மிதிவண்டிகள் நிறுத்தியிருப்பதைப் பார்த்துவிட்டு அப்பாவிடம் இப்படி நிறைய மிதிவண்டிகள் உள்ளதால் எப்படி நடிகர்கள் இந்தக் கொட்டகையில் நின்று நடித்தார்கள் எனக் கேட்டேன்.

அந்தவகையில் நான் எனது அறியாப்பருவத்தில் முதன்முதலாகப் பார்த்த துணைவன் என்ற படமும் அதில் வந்த பாடல்காட்சியும் என்றுமே மறக்கமுடியாது. இதில் பல பாடல்கள் இருந்தாலும் ஏனோ இந்தப்பாடல் அப்படியே மனதில் நீங்காதஇடத்தைப் பிடித்துவிட்டது. பாதி கறுப்புவெள்ளை,பாதி வண்ணத்திலும் உருவான இந்தப் பக்திப்படத்தினை அப்போது பார்க்காதவர்களே இல்லை எனலாம். யாழ்ப்பாணம் வெலிங்டன் (இப்போது இத்திரை அரங்கம் இல்லை)திரைஅரங்கில் எனது அப்பாவுடன் 1970ஆம் ஆண்டு எழு வயது சிறுவனாக இருக்கும் போது போய்பார்த்தது இன்றும் என்மனதில் பசுமையான நினைவாகப் பதிந்துஉள்ளது. கவியரசு கண்ணதாசனின் கவிவரிக்கு திரையிசைத்திலகம் கே.வி மகாதேவன் இசைமீட்ட மூன்றுதலைமுறை கண்ட ஜோடிகள் சௌந்தரராஜன்,சுசீலா குரல்களில் ஏ.வி.எம் ராஜன்,சௌகார்ஜானகி திரையில் தோன்றி நடித்த இந்த மலரும் நினைவுகளை மறக்கவே முடியாது---------------------------------------------------------------

நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம் 


No comments:

Post a Comment