January 15, 2014

மலரும் நினைவுகள் 7



அழகினை ரசிக்காதவர்கள் என்பது மனிதசாதியில் கிடையாது என்றே சொல்லலாம். இந்த அழகினை ரசிப்பதில் இருபாலாரும்தான் ஈடுபடுகிறார்கள்.பெண்களோ ஆண்களின் அழகை ரகசியமாக ரசிக்கிறார்கள்.ஆண்களோ பெண்களின் அழகை வாய்விட்டுப் பறைசாற்றுகிறார்கள். இதே காரணத்தினாலேயே மேலோட்டமாகப் பெண்கள் தான் அழகானவர்கள் என்ற தோற்றம் எழுப்பப்பட்டுள்ளது. இதைவிட கவிஞர்கள் பெரும்பாலும் ஆண்களாக உள்ளதால் பாடல்களில் மட்டுமல்ல காவியங்களிலும்,கதைகளிலும் பெண்களின் அழகையே வர்ணிக்கிறார்கள். ஆணும் பெண்ணும் பரஸ்பரம் அழகினை ரசித்து காதல் வசப்பட்டுக்கொள்வதும் நடக்கிறது அதை விடுவோம். பெரும்பாலும் கலைத்துறை அல்லது விளையாட்டுத் துறையினை சேர்ந்தவர்களின் அழகினை ரசிப்பவர்களே இந்த உலகினில் அதிகம். இந்த அழகை ரசிக்கப்படுவர்களில் நடிகர்,நடிகைகளுக்கே எப்போதும் முதலிடம். இனி விடயத்திற்கு வருகிறேன் கடந்த சிலவாரங்களாக எமது தாயகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை பற்றிய செய்திகளை ஊடகங்கள் வாயிலாக அறியும் போது இன்றைக்கு சரியாக 31 வருடங்களுக்கு முன்பு எனது வாழ்வில் நடந்த ஒரு மறக்க முடியாத சம்பவம் ஒன்று நினைவில் வருகிறது.அதையே மலரும் நினைவுகளாகப் பதிவு செய்கிறேன். பலர் தங்கள் அபிமான நடிகர்கள்,நடிகைகளுக்காக திரைப்படம் பார்க்க ஆவலாக இருப்பார்கள்.சிலர் பாடல்களுக்காக படம் பார்க்க ஆவலாக இருப்பார்கள்.அந்த வகையில் பாடலுக்காக படம் பார்க்க நண்பன் ஒருவனுடன் (31.12.1981இல்) போவதென்று முடிவானது. ஆனால் அன்று மழையோ கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. ஆனால் நாம் எடுத்தமுடிவில் மாற்றம் இல்லாமல் படம்பார்க்கப்போவது என்பதில் உறுதியாக இருந்தோம்.காரணம் ஒன்று எமது பிடிவாதம்,இரண்டு படம் அன்றுதான் கடைசிநாள். எனவே திட்டமிட்டபடி மிதிவண்டியில் குடைபிடித்தபடி மழையில் தோய்ந்துகொண்டு மிகவும் சிரமப்பட்டு யாழ்ப்பாணம் கரன் திரைஅரங்கினுள் (இது இப்போது இருக்கிறதா இல்லையா என்று தெரியாது) போய் நுழைந்தோம். நாம் வந்து நின்ற கோலத்தைப் பார்த்ததும் அங்கே வேலை செய்யும் ஊழியர்களுக்கு திகைப்பாகப் போய்விட்டது. அதில் ஒருவர் தம்பிமார்களே இப்படி சிரமப்பட்டு ஒரு படம் தேவையா.....உங்களுக்கு என்ன பைத்தியம் ஏதும் பிடித்து விட்டதா என எங்களைப் பார்த்துக் கேட்டார்.எனக்கோ அணிந்திருந்த உடுப்புக்கள் எல்லாம் அவிழ்ந்து வீழ்வது போல் இருந்தது. நாம் வீட்டில் இருந்து புறப்படும் போது மழை இல்லை இங்கே தான் இப்படிப் பலத்தமழை பெய்வதாக பொய் சொல்லி சமாளித்தோம்.கடும்மழை காரணமாகவோ தெரியவில்லை சுமார் பத்துப் பேர்களுடன் படம் ஆரம்பமாகியது.இது 1965இல் வெளியானபடம் மீண்டும் புதியபிரதியில் வெளிவந்தது.படம் தொடங்கியதும் மழையோமழை.... ஆரம்பித்து 15 நிமிடத்தில் வெள்ளம் திரைஅரங்கினுள் புகுந்தேவிட்டது கால்களை தூக்கி இருக்கையின் மேல் வைத்தபடியே படத்தப் பார்த்தோம்.அந்தத் துன்பமான வேளையில் இந்த இன்பமானதொரு காட்சிவந்து என் நெஞ்சை நெருடியது. எந்தப்பாடலுக்காக இவ்வளவு சிரமப்பட்டு போனேனோ அந்தப்பாடல் நான் எதிர்பார்த்ததிலும் விட கூடுதலான திருப்தியை தந்தது எனலாம். முதன்முதலில் என்னைக் கவர்ந்த அழகுதேவதை என்றால் இந்தப் பாடலில் ஜெய்சங்கருடன் இணைந்து நடித்த ஜமுனா என்ற நடிகை தான்.கருப்புவெள்ளை படமாக இருந்தாலும் கண்களுக்கு வண்ணமாகவே தென்பட்டது.கண்களின் அசைவுக்கே ஆயிரம் அர்த்தங்கள் கூறலாம்.பாடலின் இறுதி சரணத்தில் "ஒருவர் சொல்லவும் ஒருவர் கேட்கவும் இரவு வந்தது நிலவும் வந்தது" என்று இருவரும் சேர்ந்து பாடும்போது ஜமுனாவின் முகத்தின் நளினத்தைப் நாள் பூராகவும் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். குழந்தையும் தெய்வமும் என்ற படத்தில் கவிஞர் வாலி எழுதி மெல்லிசை மன்னன் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் சௌந்தரராஜன் சுசிலா பாடிய இந்த இனிமையான பாடலை தயவுசெய்து கேளுங்கள்,பாருங்கள் அத்தோடு உங்கள் கருத்தையும் தாருங்கள். இப்போது 76 வயதான தெலுங்கு நடிகையான ஜமுனா ஜெமினியுடன் மிஸ்ஸியம்மா,எம்ஜிஆருடன் தாய் மகளுக்கு கட்டியதாலி,சிவாஜியுடன் தங்கமலை ரகசியம்,மருதநாட்டுவீரன்,நிச்சயதாம்பூலம் என மிகக்குறைந்த தமிழ்ப் படங்களிலேயே நடித்துள்ளார்.கமலஹாசனின் அம்மாவாக தூங்காதே தம்பி தூங்காதே படத்திலும் நடித்துள்ளார்.

 

நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்

No comments:

Post a Comment