January 17, 2014

மலரும் நினைவுகள் 3

சென்ற மலரும் நினைவில் முதன்முதலில் கேட்டபாடல் பற்றி விபரித்திருந்தேன். இதில் முதன்முதலில் தொலைக்காட்சியில் பார்த்தபடம் பற்றி சொல்லவந்துள்ளேன். படம் மட்டுமல்ல தொலைக்காட்சிப் பெட்டியையே அன்று தான் முதன்முதலில் பார்த்தேன். அதுஒருபுறம் இருக்கட்டும் வேறொரு விடயத்திற்கு வருகிறேன். சென்றமலரும் நினைவில் நான்கு வயதின்பின்பே ஒரு நினைவை மீட்டிப்பார்க்கும் ஆற்றல் பலருக்கு பிறக்கும் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அந்தநினைவு என்பது ஒரு கனவு கண்டது போல் இருக்கும் நெஞ்சினிலே ஆழமான நினைவாகப் பதியமாட்டாது. ஆனால் பத்துவயதினைக் கடந்தபின்பு அப்படியல்ல எல்லாமே பசுமரத்தாணி போல் பதிந்து நெஞ்சினுள் நிலைத்துவிடும். அந்தவகையில் 1974ம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் ஒரு திருமணவீட்டின் ஒலிபெருக்கியில் அடிக்கடி ஒலித்தபாடல் ஒன்று இன்றும் என் இதயத்தினுள் ஒலித்துக்கொண்டேயிருகிறது. பாடலின் பல்லவியில் ஒவ்வொரு கவிதைவரியும் கவிதை,இனிமை,புதுமை,இளமை என்று "மை" என்ற எழுத்தில் முடிகிறது. முதலாவது சரணத்தில் நனைந்து,நினைந்து,வளைந்து,புரிந்து என்றும் இரண்டாவது சரணத்தில் வரைந்து,புனைந்து,நனைந்து,கலந்து என்றும் மூன்றாவது சரணத்தில் விழுந்து,கிடந்து,அளந்து,மறந்து என்று சரணங்களின் ஒவ்வொருவரியும் "து" என்ற எழுத்தில் முடிகிறது. இது இந்தப்பாடலில் உள்ள ஒரு முக்கிய சிறப்பம்சமாகும். நேற்று இன்று நாளை என்ற படத்தில் புலவர் புலமைப்பித்தன் அவர்களின் கவிதைவரி ஒவ்வொன்றும் கணீர்,கணீர் என்று காதினுள் விழுகின்றன.மெல்லிசை மன்னன் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் பாகேஸ்ரீ என்ற இராகத்தில் மிகவும் இனிமையான இசையினைத்தர, சவுண்டுக்கு ராஜன் சௌந்தரராஜனும்,இசைக்குயில் சுசீலாவும் தேனிலும் இனிய குரல்களினால் கானம் இசைக்கிறார்கள். அப்போது யாரிடமும் நினைத்த உடன் விரும்பிய பாடல்களைக் கேட்கும் வசதி கிடையாது வானொலி அல்லது எங்கேயாவது விழாக்களில் ஒலிக்கும் ஒலிபெருக்கியின் வாயிலாக மட்டுமே கேட்கலாம். அந்தவகையில் இந்தப்பாடல் அவ்வப்போது எங்கு ஒலித்தாலும் ஓடிச்சென்று உன்னிப்பாக காதைக்கொடுத்து கேட்டுமகிழ்வேன். இடையினில் இது இடம்பெற்ற படம் அன்றும் இன்றும் என்றும் என் அபிமான நடிகர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடையது என்று அறிந்ததும் இப்பாடல் மீதுள்ள அபிமானம் மேலும் அதிகரித்து விட்டது. இப்படியே நாலரை ஆண்டுகள் கழிந்துவிட்டது சரி பாடலைப் பலதடவைகள் கேட்டாச்சு பாடல் காட்சியை எப்போது பார்ப்பது என்ற ஏக்கம் என்னுள் இருந்தது.

 இப்போதுள்ள மாதிரி வீடியோ,கணணி வசதி ஒன்றுமில்லை பார்ப்பதற்கு. படம் திரை அரங்கில் திரையிடப்பட்டால் மாத்திரமே பார்க்கலாம். சரி இனி விடயத்திற்கு வருகிறேன். 1979ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இலங்கையில் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் வீடுகளில் கிடையாது கடைகளில் மட்டும் சிறிய அளவில் காட்சிக்கும்,விற்பனைக்கும் இருந்தது. அந்தக்கடைக்காரர்கள் பொதுஇடங்களில் பெரிய விளம்பரங்களுடன் படங்களை பணம் வாங்கி காண்பித்தார்கள். படத்தை மட்டுமல்ல தொலைக்காட்சிப்பெட்டியைப் பார்க்கவும் மக்கள் திரண்டனர். எங்கள் ஊரின் அரிசி ஆலை ஒன்றில் இன்று இரவு நேற்று இன்று நாளை படம் காண்பிக்கப்படும் என்று அறிந்தேன். மக்கள் திலகத்தின் தீவிர ரசிகனாகிய என் நண்பன் ஒருவனிடம் போய் விசயத்தை சொன்னேன் எங்கள் அதிஷ்டம் தான் என்னவோ என்று எங்கள் கல்லூரியில் வருடாந்த பரிசளிப்புவிழா எனவே அந்த விழாவிற்கு போவதாக பெற்றோரிடம் சொல்லிவிட்டு மிகுந்த சிரமப்பட்டு பெரும் கூட்டத்தினர்மத்தியில் உள்ளேநுழைந்து தரையில் உட்கார்ந்து முதன்முதலாக ஒரு பாடலுக்காக இந்தப்படத்தைப் பார்த்தேன். என் ஆவலைப் பூர்த்தி செய்யவோ என்னவோ தெரியவில்லை படத்தின் ஆரம்பத்திலே இந்தப்பாடல் வந்துவிட்டது. பாடலைப் போலவே பாடல் காட்சியும் பிரமாதம். காண்போரை கட்டிப்போடும் வசீகரத்திற்கு சொந்தக்காரன் ஆகிய எம்ஜிஆரும் அப்போதைய கனவுக்கன்னி மஞ்சுளாவும் பாடலுக்கு ஏற்றால்போல் எழில்மிகு பிருந்தாவனம் பூங்காவில் ஆடிப்பாடி நடித்த ரம்மியமான காட்சி இது.பாடல் ஆரம்பிக்கும் போது முதலில் எம்ஜிஆர் பின் மஞ்சுளாவும் சிரித்தபடி தலையை அசைத்து வந்து பின் மறையும் சில வினாடிகளுக்காகவே இந்தப்பாடல் காட்சியை பலதடவைகள் பார்த்துவிட்டேன். 1982ம் ஆண்டில் தான் இப்படம் திரைக்கு வந்தது. இப்பாடல் காட்சியைப் பெரிதாகவும்,முழுமையாகவும் பார்ப்பதற்காக அதே நண்பனுடன் யாழ்ப்பாணம் ஸ்ரீதர் திரை அரங்கில் இப்படத்தினை மீண்டும் பார்த்தோம். நான் அதிகதடவைகள் கேட்டபாடல்,பார்த்த பாடல்காட்சி என்றால் இதுவேதான். எத்தனை தடவைகள் இருக்கும்??????? நூறுக்கும் அதிகம்.


நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்

No comments:

Post a Comment