January 17, 2014

மலரும் நினைவுகள் 4



கடந்த மலரும் நினைவுகளில் முதன்முதலாக தொலைக்காட்சியில் பார்த்தபடம் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.இன்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்பு இளைஞர்களிடம் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்து கல்லூரியில் படிக்கும் தமிழ்இளைஞர்களிடம் காணப்பட்ட முக்கிய புரளிகள் என்றால் பெற்றோருக்கு தெரியாமல் களவாக படம் பார்க்கப்போதல்,கள்ளுக் குடித்தல்,புகைத்தல்,கடலில் குளிக்கப்போதல், (குறிப்பாக கீரிமலைக்கேணி,காரைநகர் சவுக்குக் கடற்கரை) மற்றும் பெற்றோர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ இளம் பெண்களை பார்க்கவோ அல்லது கேலி செய்யவோ கோவில் திருவிழாக்களுக்கு போதல்,பெண்கள் கல்லூரிகளின் வாசலில் காவல் காத்தல் போன்றனவாகும்.இதில் முதலிடம் எதுவென்றால் படம் பார்க்கப் போவது தான்.இதில் ஈடுபடாத இளைஞர்கள் எவருமே இல்லை எனலாம்.இதற்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா? இந்தக் களவாகப் படம்பார்க்க யாழ்ப்பாணம் நகருக்கு போகும் வியாதி என்பது பலருக்கு எட்டு,ஒன்பதாம் வகுப்பிலேயே தொடங்கிவிடும்.எனக்கும் அப்படித்தான் அந்த வியாதி நேரத்தோடு பீடித்துவிட்டது.ஆனால் என்னால் முடியவில்லை காரணம் யாழ்ப்பாண நகருக்கு வெளியே உள்ள கல்லூரியில் நான் படித்த படியால் போய்வருவது என்பது பெரிய பிரச்சனை ஏனென்றால் யாராவது கண்டால் பெற்றோருக்கு போய் சொல்லிவிடுவார்கள்.இன்னொரு முக்கியகாரணம் எனது அப்பாவின் கண்டிப்பு என்பது. இது உலகப்பிரசித்தி பெற்றது. எம்மைப்பற்றி அப்படிஇப்படி ஏதும் அறிந்தால் பின்னி எடுத்துப்போடுவார்.கடலில் குளிக்கும் கைங்கரியத்தை ஆரம்பித்தாலும (இதுவும் பெரியஅளவில் இல்லை) படம் பார்க்கப்போகும் வேலையை மட்டும் தொடங்க ஒரு தயக்கம் இருந்தது.எனது நண்பர்கள் பலமுறை வற்புறுத்தியும்,தைரியம் சொல்லியும் எனக்கு என்னவோ பயமாக இருந்தது அவர்களுடன் போவதற்கு .நண்பர்களை அனுப்பிவிட்டு நான் மட்டும் தனியாக கவலையுடன் வீட்டை போவேன்.இப்படியே சிலவருடங்கள் கழிந்துவிட்டன நானும் உயர்தரவகுப்புக்கு வந்துவிட்டேன்.1979ம் ஆண்டில் இலங்கை வானொலியில் அதிகாலை ஐந்து மணிக்கு புலரும் பொழுது என்ற நிகழ்ச்சியில் அடிக்கடி ஒலிக்கும் ஒருபாடல் இதமான அதிகாலை பொழுதிற்கு ஏற்றால்போல் மோகன ராகத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் கல்யாணராமன் என்ற படத்திற்காக பஞ்சு அருணாசலத்தின் நளினமான கவிதைவரிக்கு சைலஜா இனிமையாக குரலிசைக்க என் நெஞ்சை தொட்டது.அப்போது வழமையாக ஒருபடம் தமிழகத்தில் வெளியாகி இரண்டு ஆண்டுகளின் பின்பே இலங்கையில் திரையிடப்படும் இத்திரைப்படம் மட்டும் அடுத்த ஆண்டு அதாவது 1980ல் இலங்கையில் தமிழ்ப்புத்தாண்டு அன்று திரையிடப்பட்டது.எப்படியாவது இதை பார்க்க வேண்டும் என்ற ஆசை என்மனதில் குடிகொண்டுவிட்டது.வீட்டில் கேட்டாலும் விடமாட்டார்கள்.களவாகப் போய் பார்க்கவும் பயம்.எனது நண்பர்கள் எல்லோரும் போய் பார்த்துவிட்டனர்.படமோ நூறு நாட்களைக் கடந்தும் விட்டது.பத்திரிகையில் விளம்பரம் வந்தது யாழ்ப்பாணம் ராணி திரையரங்கில் கல்யாணராமன் திரைப்படம் கடைசிவாரம் என்று போச்சுது........ இனியும் தாமதிக்கக்கூடாது துணிந்து போய் பார்ப்பது என்று முடிவு எடுத்துவிட்டேன்.தனிய அதுவும்  
முதல்தடவை களவாக எப்படிப் போய் பார்ப்பது.நண்பர்கள் எல்லோரும் ஏற்கனவே பார்த்து விட்டனர் இனி எப்படி அவர்களிடம் போய் கேட்பது ஒரே குழப்பம்..... எனது நண்பர்கள் கூட்டத்தில் ஒருவர் அட்டகாசம் எதுவுமற்ற அமைதியாக சுபாவமுடையவர் அவரைப் போய் அணுகினேன்.மற்றைய நண்பர்களுக்கு சொல்லாமல் நாம் இருவரும் போவது என்று முடிவாகி விட்டது.அந்த வாரம் பரீட்சைகள் எல்லாம் முடிந்து விடுமுறைக்கு முதல்வாரம் என்றபடியால் எமக்கு வசதியாகப் போய்விட்டது.பாடப்புத்தகங்கள் எல்லாவற்றையும் நெஞ்சுக்கும் நாம் அணிதிருந்த சட்டைக்கும் இடையில் சொருகிவிட்டு தனித்தனி மிதிவண்டியில் யாழ்ப்பாணம் ராணி திரையரங்கு நோக்கி புறப்பட்டோம்.இடையில் தெரிந்தவர்கள் யாரும் வருகிறார்களோ என்ற பயம் வேறு.திரும்பிப் பார்க்காமல் ஒரே ஓட்டம்.நேரத்தோடு போய்விட்டோம் ஆனால் வெளியே தலைகாட்டாமல் படம் ஆரம்பிக்கும் வரை உள்ளேயே இருந்தேன் காரணம் ராணி திரையரங்கு(இப்போது இல்லை) யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு எதிரே இருப்பதால் யாரும் என்னை கண்டுவிடுவார்களோ என்ற பயம்.சரியாக பத்துமுப்பதுக்கு எனது திருட்டுப்படம் பார்க்கும் படலம் அன்று அரங்கேறியது.என்ன ராசியோ தெரியவில்லை இதைத் தொடர்ந்து நிறையப்படங்கள் இதே பாணியில் தொடர்ந்தது.............................................


நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்

No comments:

Post a Comment