January 17, 2014

மலரும் நினைவுகள் 2

கடந்த எனது மலரும் நினைவுகளில் முதன்முதலாகப் பார்த்த திரைப்படம் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.இந்தத்தடவை முதன்முதலாக என் காதில் வந்து ஒலித்த பாடல் பற்றியது.பொதுவாக பலருக்கு நான்கு வயதை அடைந்தபின்பு தான் ஒரு நினைவை மீட்டுப்பார்க்கும் சக்தி கிடைக்கும் எனக்கும் அப்படியேதான் நான்கு வயதாக இருக்கும் போது இந்தப்பாடல் இலங்கை வானொலி மூலமாக என் காதுகளில் வந்து ரீங்காரமிட்ட நினைவு என் நெஞ்சினிலே நிரந்தரமாக குடிகொண்டுவிட்டது.குறிப்பாக பாடலின் ஆரம்ப இசையினை கேட்கும்போது இறக்கைக்கட்டி வானத்தில் பறப்பதுபோல் ஒரு உணர்வு ஏற்படுகிறது.பின்பு பாடலைக் கேட்டுக்கொண்டு இருக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை மறந்து பாடலின் முடிவின் போது ஒலிக்கும் ஆலாபனையுடன் இந்த உலகையே முழுவதுமாக மறந்து மயங்கிவிடுவது போல் ஒரு உணர்வை தந்துவிடும் கானமிது.அதுவும் கவியரசு கண்ணதாசன்,மெல்லிசை மன்னன் எம் எஸ் விஸ்வநாதன்,சௌந்தரராஜன் சுசீலா இவர்களின் கூட்டணியில் உருவான பாடல் என்றால் சொல்லவும் வேண்டுமா.நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தில் வெளிவந்து முதலில் என் நெஞ்சை தொட்ட பாடலை நெஞ்சிருக்கும் வரை மறக்கவே முடியாது. 

பொன் மணி முத்துக்கள், பவளங்கள் வைரங்கள் 
இன்னபல செல்வங்கள் எல்லாமும் பெண்ணொருவள் 
கண்வலையில் வீழ்ந்த பின்னர் காளையர்க்குப் பொருளாமோ
காதல் தரும் சுகம் போல வேறெதுவும் உலகிலுண்டோ

 
ஒரு பெண்ணிடம் உள்ளத்தில் காதல் பிறந்த பின்னர் காளை ஒருவனுக்கு இவ்வுலகமும் அவளே, இவ்வுலகிலுள்ள அனைத்து செல்வங்களும் அவளே. கன்னி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் காளை அவனுக்குப் பசியே மறந்துவிடும், அவள் வாய்திறந்து பேசிவிட்டாலோ உலகத்தை மறந்து, உறக்கத்தை மறந்து, உள்ளத்தால் அவளுடன் ஒன்று கலந்து விடுவான். 

என்னே காதலின் சக்தி! அதனாலேயே 
காதலினால் மாந்தருக்குக் கலவியுண்டாம்
கலவியினால் மாந்தருக்குக் கவலை தீரும் 
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே 
என மஹாகவி பாரதி பாடி வைத்தாரோ


நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்

No comments:

Post a Comment