January 18, 2014

மலரும் நினைவுகள் 12

மலரும் நினைவுகளுக்கு முடிவுகட்டிவிட்டு புதிதாக வேறு ஒன்றை தொடங்கலாம் என்ற யோசித்தேன்.ஆனால் மலரும் நினைவுகள் என்னைவிட்டுப் போவதாக இல்லை.இன்று யாழ்ப்பாண குடாநாட்டையே அதிரவைக்கும் விழாவான நல்லூர்க்கந்தனின் தேர்த்திருவிழா உற்சவமாகும்.இதேநாளில் நான் பத்துவயது சிறுவனாக இருந்தபோது
1973
ம் ஆண்டு 40வருங்களுக்கு முன்பு நடந்த சம்பவமே இன்றைய மலரும் நினைவுகள் ஆகிறது.

காலை ஏழுமணிக்கு தேர் உற்சவம் நடைபெறுவதால் நேரத்தோடு எழும்பி சாப்பிடாமல் யாழ்தேவி எனப்படும் கொழும்பு செல்லும் கடுகதி தொடரூந்தில் வழமைபோல் யாழ்ப்பாணம் போய் அங்கிருந்து நடந்து நல்லூருக்குப் போனோம்.சுவாமிதரிசனம் எல்லாம் முடித்துவிட்டு ஆங்காங்கே இருக்கும் தண்ணீர்ப் பந்தல்களில் தாகம் தீர்த்தபடி ஆலய வளாகத்தில் உள்ள கடைகளை சுற்றிப்பார்த்தபடியும்,தெரிந்தவர்களைக் கண்டு உரையாடிய படியும் நடந்து வந்தோம்.சற்றுத்தொலைவில் ஓரிடத்தில் உணவு கொடுப்பதையும் பக்தர்கள் அதை முண்டியடித்துக்கொண்டு வாங்குவதையும் கண்ணுற்றேன்.காலையிலிருந்து எதுவும் சாப்பிடாதபடியால் பசிக்கொடுமையில் என்னை அறியாமலே என் பெற்றோர்,உடன்பிறப்புகள் எவருக்குமே சொல்லாமல் அந்த இடத்திற்குப் போய் பெரும் சிரமப்பட்டு சனநெரிசலுக்கிடையில் ஒருபிடி சுண்டல் மட்டும் வேண்டினேன்.என்றாலும் இருந்த பசிக்கு அது ஒரு அமிர்தமாகவே இருந்தது எனக்கு அப்போது.சாப்பிட்டு முடிந்ததபின்புதான் எல்லோரையும் நான் தவறவிட்டுவிட்டதை உணர்ந்துகொண்டேன்.பெரியவர்கள் என்றால் சமாளித்துக் கொள்வார்கள்.பத்துவயது பையன் என்றால் அழுவதைத்தவிர என்ன தெரியும்.நானும் அதையே செய்தேன்.சுற்றுமுற்றும் அழுதபடி அம்மா,அப்பாவை தேடி அலைந்து திரிந்தேன்.அப்போது அருகில் உள்ள கடையில் எனது நிலைமைக்கு ஏற்ற பாடல் ஒன்று ஒலித்தது.அப்பாடல் அப்போது மிகவும் பிரபல்யமானது.தினமும் காலை ஏழுமணிக்கு ஒலிபரப்பாகும் பிறந்தநாள் நிகழ்ச்சியில் இப்பாடலைக் கேட்கலாம்.பல்வேறு மிருகங்கள் வாழும் நடுக்காட்டில் தனது பெற்றோரை தவறவிட்ட சிறுமி ஒருத்தி தன் கண்ணில் தென்படும் விலங்குகளைப் பார்த்து தனது துணைக்கு வரும்படி அழைப்புவிடும் பாடலிது.அதுவும் பசியுடனே இப்பாடலைப் பாடுகிறாள்.அதேநேரம் இப்பாடல் இடம்பெற்ற படமும் யாழ்ப்பாணம் றியோ திரையரங்கில்(பலவருடங்களுக்கு முன்பே இத்திரையரங்கம் மூடப்பட்டுவிட்டது) ஓடிக்கொண்டு இருக்கிறது.திக்குத்தெரியாத காட்டில் என்ற படத்தில் கவிஞர் வாலி எழுதி மெல்லிசை மன்னன் எம் எஸ் விஸ்வநாதன் இசையமைக்க இராஜேஸ்வரி பாடிய பாடல் இது.

இதேவேளை எனது பெற்றோர்,சகோதரர்களும் பதறிப்போய் என்னை தேடி அலைந்து திரிகிறார்கள்.நான் பயந்ததற்கும்,அழுததற்கும் இரண்டு காரணங்கள் இருந்தது.ஒன்று பெற்றோரை தவறவிட்டது இரண்டாவது அவர்களை கண்டுபிடித்த பின்பு எனக்குக் கிடைக்க இருக்கும் தண்டனை.அந்த சனசமுத்திரத்தின் மத்தியில் எனது அதிர்ஷ்டம் தான் என்னவோ பதினைந்து நிமிட போராட்டத்தின் பின் தவறவிட்ட எல்லோரையும் கண்டுபிடித்துவிட்டேன்.அழுகையும் நின்றுவிட்டது ஆனால் சிறிது நேரம் மட்டுமே.காரணம் நான் எதிர்பார்த்தது போல"எங்கள் எல்லோரையும் பதறடிக்க வைத்துவிட்டாய்" என்று சொல்லி அப்பா எனது காதைப்பிடித்து முறுக்கிவிட்டார்.மீண்டும் அழுதபடி வீடுவந்து சேர்ந்தேன்.

 

நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்

No comments:

Post a Comment