January 17, 2014

மலரும் நினைவுகள் 6


கடந்த மலரும் நினைவுகளில் முதன்முதலாகப் பார்த்ததிரைப்படம்,முதல் கேட்டபாடல்,முதல் தொலைக்காட்சியில் பார்த்தபடம்,முதல் களவாகப் பார்த்தபடம் போன்றனவை பற்றி எழுதியிருந்தேன்.இன்று வர இருப்பது முதல் மேடையில் பாடியபாடல் பற்றியது.
நான் படித்த ஆரம்பப் பாடசாலையில் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று இறுதியாக நடைபெறும் இரண்டு வகுப்புக்களை இரத்துச்செய்துவிட்டு அதற்குப் பதிலாக கலைநிகழ்வு நடைபெறும். மூன்றாம் வகுப்பு தொடக்கம் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் தங்களுடைய கலைத்திறமைகளை வெளிப்படுத்துவதற்கு என்று இப்படியொரு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.நான் முதலாம்,இரண்டாம் வகுப்புக்கள் படிக்கும் போது எப்போது மூன்றாம் வகுப்பிற்கு போவேன் என்று நாட்களை எண்ணியபடியே இருந்தேன்.காரணம் அந்த நிகழ்வினைப் பார்க்கவேண்டும்,பங்கெடுக்கவேண்டும் என்ற ஆர்வமேயாகும்.
அதன்படியே நாட்கள் உருண்டோடின மூன்றாம் வகுப்பினுள் நுழைந்தும் விட்டேன்
முதல்சில நிகழ்வினை அமைதியாக இருந்து பார்த்தேன்.அதில் பலவிதமான கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இருந்தும் பலர் அப்போது மிகப் பிரபலமாக இருந்த திரைப்படப் பாடல்களே அதிகம் பாடினார்கள்.ஆனால் அப்போது பட்டிதொட்டி எங்கும் ஒலித்து பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்த மிகப்பிரபலமான பாடலை யாருமே பாடவில்லை.அடுத்த நிகழ்வின்போது அதை நான் பாடவேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது.இதுபற்றி எனது வகுப்பு ஆசிரியையுடன் அடுத்துச் சொன்னேன் அவவும் தான் ஏற்பாடுசெய்வதாக உறுதியளித்தா.அந்த ஆசிரியை எமது உறவினர் என்பதால் தான் இப்படி சுலபமாக காரியம் கைகூடியது.இல்லாதுவிட்டால் கொஞ்சம் சிரமம்தான்.(அவ இப்போது உயிருடன் இல்லை) நிகழ்வு தொடங்கியதும் முதலாவதாக எனது பெயரை அறிவித்தார்கள்.எல்லோருக்கும் சிறிய அதிர்ச்சி.காரணம் நான் பாடப்போகும் செய்தி பெரியளவில் மற்றவர்களுக்கு போய்ச்சேரவில்லை.நானும் கைகால்கள் பதற மேடையில் ஏறிநின்று பாடினேன்.பாடிக்கொண்டு இருக்கும்போதும், பாடிமுடிந்ததும் ஒரே கைதட்டல்,ஆரவாரம் என மண்டபமே அதிர்ந்தது.இத்தனையும் எனக்கல்ல அந்தப்பாடலுக்கே.ஏனெனில் இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளியாகி எட்டுத்திக்கிலும்,எல்லோரினதும் வாயிலும் ஒலித்துக்கொண்டிருந்த பாடலிது.இதைவிட சிலவாரங்களுக்கு முன்புதான் இப்பாடல் இடம்பெற்ற படம் வெளியாகி இருந்தது.அந்தப்படத்தை பார்கப்போவோரை விட படம் திரையிடப்பட்ட யாழ்ப்பாணம் ராணி திரைஅரங்கில் காணப்பட்டஉருவப்படங்கள் (கட்அவுட்) பார்க்கவே அதிக கூட்டம் நின்றது. மிக உயரமும்,அழகும் நிறைந்த இது நகருக்குள் நுழைய முன்பே கம்பீரமாக காட்சி அளித்தது.இவ்வளவு முக்கியத்துவம் கொண்டதென்றால் இது யாருடைய படமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்.வெற்றியின் அதிபதி கலையுலகில் மக்களை நேசித்த மனித நேயன் இவன் போல் இனி யாருமில்லை என்று தனது செயற்பாடுகளால் உலகுக்கு உணர்த்திய பொன்மனச் செம்மல்,புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் அடிமைப்பெண் என்ற படம்தான்.1971ம் ஆண்டில் மிகவும் பரபரப்பாக ஓடிய இப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள் எழுதி திரையிசைத்திலகம் கே வி மகாதேவன் இசையமைக்க கம்பீரக்குரலோன் சௌந்தரராஜன் பாடியுள்ளார்.

பாராட்டுமழையில் நனைந்துகொண்டே வீடுநோக்கிப் போனேன். பாடசாலைக்கும் வீட்டுக்கும் இடையில் எமது அப்பாவின் கடை உள்ளது.நான் பாடப்போகும் செய்தி முன்பே யாருக்கும் சொல்லவில்லை.காரணம் சிலவேளை எனக்கு வாய்ப்பு தரமாட்டார்கள் என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது நான்
[4:12:09 AM] சர்வா Sarva: .ஆனால் நான் பாடிய செய்தி எப்படியோ அப்பாவின் காதுகளுக்கு எட்டிவிட்டது.விரைவாக வீடுபோய்ச் சேருவோம் என்று வேகமாக நடந்து கடையை தாண்டும் போது அப்பா தன்னிடம் வரும்படி கூப்பிட்டார்.நானும் நடுங்கிக்கொண்டு போனேன் காரணம் மலரும் நினைவுகள் நான்காம் பாகத்தில் அப்பாவின் கண்டிப்பு பற்றி சொல்லியிருக்கிறேன்.
ஆனால் நான் நினைத்ததற்கு மாறாக அவரும் சிரித்துக்கொண்டே பாராட்டி இனிப்புவகைகளையும் பரிசாகத் தந்தார்.எட்டு வயதில் மேடையேறிப் பாடியதால் தொடர்ந்தும் இன்றுவரை பெரிய மேடைப்பாடகனாக நிகழ்வதாக என்னை நினைத்து விடாதீர்கள். நான் வெறும் குளியலறைப் பாடகன் மட்டுமே.இதை வாசித்துவிட்டு வெறும் விருப்பத்தை மட்டும் தெரிவிக்காமல் உங்கள் ஆக்கபூர்வமான கருத்தினையும் எதிர்பார்க்கிறேன்.


நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்
                                      

No comments:

Post a Comment