January 15, 2014

மலரும் நினைவுகள் 14


அண்மையில் உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவந்துவிட்டன.இதில் வெற்றிக்கனியை சுவைத்த மாணவர்களுக்கு முதலில் எனது பாராட்டுக்களை தெரிவிப்பதுடன்,கடுமையாகப் படித்தும் வெற்றிக்கனியை கோட்டைவிட்ட மாணவர்களுக்கு ஆறுதலுடன்,அடுத்ததடவை வெற்றிபெறவேண்டும் என வாழ்த்துவதுடன்,ஊக்கமாகப் படிக்காமலே வெற்றிக்கனியை கோட்டைவிட்ட மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டு இம்முடிவு வெளியானதைத் தொடர்ந்து அந்தப் பரீட்சை எழுதிய எனது முகநூல் நண்பர்களை பலர் தலைமறைவாகிவிட்டார்கள்.அவர்களைத் தேடிக்கண்டுபிடிப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்ற உறுதிமொழியோடு,இதே சங்கடமான நிலைமைக்கு தள்ளப்பட்ட ஒரு சம்பவம் ஒன்றே இன்றைய மலரும் நினைவுகள் ஆக வருகின்றது.

1981ம் ஆண்டு நானும் இதே பரீட்சையை எழுதிவிட்டு ஏதோ நன்றாக எழுதி சிறந்த பெறுபேறுகள் வரும் என்ற எதிர்பார்ப்போ அல்லது மிக மோசமாக எழுதிவிட்டு மோசமான பெறுபேறுகள் வருமென்ற எதிர்பார்ப்போ இன்றி படிப்புகள் எல்லாம் மறந்தநிலையில் எல்லாவற்றையும் மறந்து திரைப்படம் உதைபந்தாட்டம் கடற்கரைகுளிப்புகள் திருவிழாக்கள் என்று முடிவுகள் வரும்வரை நண்பர்களுடன் சுதந்திரமாக சிறகடித்துப் பறந்துகொண்டு திரிந்தேன்.இதேகாலப்பகுதியில் திடீரென பரீட்சை முடிவுகள் வரப்போவதாக பேச்சுக்கள் அடிபடவே ஒ....... நானும் பரீட்சை எழுதினேன் என்ற நினைப்பு அப்போதுதான் வந்தது.கூடவே ஒரு பயமும்,பதட்டமும் உண்டாகிவிட்டது.அதைவிட அன்று யாழ்ப்பாணம் ஸ்ரீதர் திரையரங்கில் மக்கள் திலகம் எம்ஜிஆரின் சிரித்துவாழ வேண்டும் என்ற படமும் வெளிவந்தது.எம்ஜிஆரின் தீவிர ரசிகனாகிய நானும் எனது நண்பனும் எப்போதுமே முதல்நாள் முதல் காட்சியை பார்ப்பது வழக்கம்.ஆவலுடன் எதிர்பார்த்த இந்தப்படமும் எதிர்பார்க்காத பரீட்சை முடிவுகளும் ஒரேநாளில் வெளியானது மிகுந்த எரிச்சலை உண்டாக்கியது.இப்போது உள்ளதுபோல் அப்போது இணையத்தளவசதிகள்,தொலைபேசி வசதிகள் எதுவும் இல்லை எனவே பாடசாலைக்கு நேரில் சென்று தான் பெறுபேறுகளை அறியலாம்.ஆகவே படமா பெறுபேறுகள் முக்கியமா?என தீவிரமாக யோசித்துவிட்டு பெறுபேறுகள் படுமோசமானதாகவே இருக்கும் அதைவிட காண்பவர்கள் எல்லோரும் உனக்கு என்ன பெறுபேறு எனக்கேட்டபடியே இருப்பார்கள்,பிறகு அல்லது நாளைக்கும் அதை அறியலாம் படத்தை முதற்காட்சியில் போய் பார்ப்பது என்று முடிவாகிவிட்டது.இதேவேளை வேறுசில நண்பர்கள் பெறுபேறுகளை பார்த்துவிட்டு திரும்பிவந்துகொண்டு இருந்தனர்.அவர்களை எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தது.அவர்கள் வாயிலாக எங்கள் பெறுபேறுகளையும் அறிந்துகொண்டோம்.இனியும் இதில் நின்றால் பிழை,வீட்டுப்பக்கம் போனாலும் பிழை எனவே எல்லோரும் படம் பார்க்கப் போவோம் என்று மேலும் சிலரை சேர்த்துக்கொண்டு யாழ்நகர் நோக்கி கிளம்பிவிட்டோம்.

எங்களுடன் படம் பார்க்கவராத நண்பர்களின் ஒருவன் ஒரு உளறுவாய்.அவனையும் எப்படியாது படம்பார்க்க கூட்டிக்கொண்டி போயிருக்கவேண்டும்.அப்போது இருந்த மனப்பதட்டம் காரணமாக அதை செய்யவில்லை.அந்த உளறுவாய் படம்பார்க்கப்போன அனைவரினதும் ஊருக்குள்போய் பெறுபேறுகளையும்,படம் பார்க்கப்போன தகவலையும் பரப்பிவிட்டான் அந்தப்பாவி.முதல்நாள்,முதல்காட்சி,எம்ஜிஆர் படம் என்றால் கூட்டத்திற்கு சொல்லவேண்டுமா...........மழைவேறு கொட்டுகிறது.பெரியபோராட்டத்தின்பின் ஒருவாறு படம்பார்த்துவிட்டு வெளியே வந்தோம்.அடுத்து வீட்டைபோய் எப்படி சமாளிக்கிறது என்ற ஏக்கம்.சரி பரீட்சை முடிவுகள் எப்படி எனக்கேட்பார்ஏதோ சமாளிப்போம் என்று போனேன் ஆனால் அவர்களுக்கு ஏற்கனவே எல்லாமே தெரிந்துவிட்டதே.......என்ன தைரியம் உனக்கு,ஏதோ திறமான பெறுபேறுகளை எடுத்தவன் போல் எமக்கும் சொல்லாமல் படம் பார்க்க போய்விட்டாயே என்று ஒரே அர்ச்சனை......ஒருவர் இருவர் அல்ல எல்லோரும் சேர்ந்து .......இது ஒருவாரமாகத் தொடர்ந்தது.......வீட்டில் ஏதும் பிரச்னை என்றாலோ அல்லது யாரும் மனம் நோகும்படி பேசினாலோ பெரும்பாலானவர்கள் செய்வது உண்ணாவிரதம்தான்.இதையே சில நாட்களுக்கு நானும் கடைப்பிடித்தேன்.இதனால் சூடு கொஞ்சம் தணிந்தது.இந்தப்பிரச்சனை ஊருக்குள்ளும் பரவிவிட்டது.இதனால் சிலநாட்கள் நானும் வீட்டைவிட்டு வெளியே தலைகாட்டவே இல்லை.அப்படிப் போவதாயின் வழமையான பாதையினால் போகாமல் சந்துபொந்துகள் வழியாகவே போவதுண்டு.நண்பர்களுடனான தொடர்புகளும் பலவாரங்களாக அறுந்தநிலையிலேயே இருந்தது.எனக்கு ஏற்பட்ட அதே பிரச்சனைகள் என்னுடன் படம்பார்க்க வந்தவர்கள் பலருக்கும் ஏற்பட்டதாக பின்பு அறிந்தேன். சிரித்து வாழவேண்டும் உடனே பார்க்கவேண்டுமென்ற ஆவல் ஏற்பட முதற்காரணம் இந்தப்பாடல்தான்.அப்படியொரு இனிமை,வாலியின் கவிதை நயத்திற்கு விஸ்வநாதனின் அட்டகாசமான இசையுடன் சௌந்தரராஜன் ஜானகியின் இனியகுரல்வளமும் சேர ஐந்து நிமிடம் முப்பத்தைந்து வினாடிகள் இடம்பெறும் இப்பாடலில் எட்டு உடுப்புகளில் எம்ஜிஆரும் லதாவும் வந்து ஜொலிக்கின்றனர்.ஸ்ரீதர் அகன்ற வெண்திரையில் ஒரு கனவு உலகத்திற்கே எம்மை அழைத்து சென்றுவிட்டனர்.



நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம்

No comments:

Post a Comment